26 Februar 2006

பப்பாளியின் மருத்துவக் குணம்



17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி. மிகவும் இனிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களிலும் பப்பாளி வரத்து இருக்கும். பழுக்காத காய்கள் பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்தபின் விதைகள் மிளகு போன்று இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும்.

நல்ல மலமிளக்கியாகவும், பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள பப்பாளி சற்றே எண்ணெய்ப் பசையாக உள்ள பழமாகும். இதுவும் உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு அருமருந்து பப்பாளி.

பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸாகவும், மீதி ஃபிரக்டோஸ் (பழச் சர்க்கரை) ஆகவும் உள்ளது. பழங்களிலேயே வைட்டமின் ‘ஏ’ சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க வைட்டமின் ‘சி’ கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் ‘சி’யும் மிக அதிகமாக இருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசினும் உண்டு.

பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதிப் பொருட்கள் (என்சைம்) உள்ளது. இதற்கு ‘பப்பாயின்’ என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

பச்சைக்காயை வேண்டுமானால் சாறாக்கிக் குடிக்கலாம். பழுத்த பப்பாளியை அப்படியே உண்ணலாம். இதை சாறாக்கத் தேவையில்லை. அப்படியே சாறாக்கிப் பயன்படுத்த வேண்டுமானால் கொஞ்சம் பால் அல்லது நீர் கலந்து கொள்ளலாம். புத்துணர்ச்சியை ஊட்டக்கூடியது பப்பாளியின் சாறு.

மருத்துவப் பயன்கள்

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச்சோகைக்கு பப்பாளி நிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. மேலும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது. எனில், நோய்வாய்ப் படுவதற்கும் சாத்தியமில்லை. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும், ஆஸ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

தொகுப்பு : மா. பிரபா
nantri-Kumutham
padam-yarl.com

வயிற்றுவலி


வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள்.

அதில் வயிற்றுவலி என்பது வயிறு அல்லது உணவுக் குழலில் ஏற்படும் வலியைக் குறிக்கும். வயிற்றுவலி வந்தவுடன் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் உடனே டாக்டரிடம் ஓடமாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த மண்வாசனை மருத்துவத்தை செய்து பார்ப்பார்கள். சாதாரண வலி என்றால் இந்த மருத்துவத்திற்கே கட்டுப்பட்டு விடும். கிராமப்புறத்தில் வயிற்று வலிக்கு என்னென்ன மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் அவசர காலத்தில் உதவும்தானே.

அதற்கு முன் எத்தனை வகையான வயிற்றுவலி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்:

1. வயிற்றில் குடல்புண் இருந்தால் வயிறுவலிக்கும்.
2. உணவு செரிக்கவில்லை என்றால் வயிறுவலிக்கும்
3. காரம், புளி போன்றவை அதிகரித்தாலும் வயிறுவலிக்கும்.
4. அடிக்கடி தலைவலி வருகின்றவர்கள் அனாசின், சாரிடான் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் வயிறு வலிக்கும்.
5. கெட்டுப்போன உணவை உண்டதால் சிலருக்கு வலி ஏற்படும். இவற்றில் எது சரியான காரணம் என்பதைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டு பிடித்தவுடன் வயிற்றுப் புண் என்றால் புண்ணுக்குரிய மருந்து முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவம்

மருந்து_1
நற்சீரகம் _ 100கிராம், ஓமம் _ 100கிராம், இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு _ 100கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும். வயிற்று வலி பூரண குணமாகி விடும்.

மருந்து _ 2
அதிமதுரம் _ 50கிராம், இந்துப்பு _ 50கிராம், நவாச்சாரம் _ 50கிராம் மூன்றையும் பொடியாக்கி 3கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்.

மருந்து _ 3
முருங்கையிலைச்சாறு _ 50 கிராம், நற்சீரகம் _ 50 கிராம் இரண்டும் கலக்கும் வரையில் அரைத்துக் குடிக்கத் தீராத வயிற்று வலிகள் தீரும். சில நாட்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால் நாள்பட்ட வயற்றுவலி குணமாகும்.

மருந்து _ 4
அருகம்புல் _ 100 கிராம், முற்றிய வேப்பிலை _ 100 கிராம் எடுத்து நன்கு இடித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி சாறு எÊடுத்துப் பருகினால் வயிற்றுவலி நாட்பட்டதாக இருந்தாலும் 15_20 நாட்கள் குடித்து வந்தால் கண்டிப்பாகக் குணம் ஏற்படும்.

மருந்து _ 5
சுத்தமான களிமண்ணை மாவுபோல் பிசைந்து அடையைப் போல் தட்டி அடி வயிற்றின் மேல் கட்டி வைத்து சுமார் 3 மணி நேரம் கழித்து எடுத்துப் போட்டுவிடவேண்டும். வெயிலில் வேலை செய்து திரும்பியவர்கள் வயிற்று வலி நீர் இறங்கவில்லை என்று கூறினால் மல்லாந்Êது படுக்கவைத்து வயிறு முழுவதும் விளக்கெண்ணெய் பூசி வைத்தால் வயிற்றுவலி குறையும்.

அதிகமான கவலை, மனஉளச்சல், உணர்ச்சிவேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின் தாக்கத்தால் தான் பெரும்பாலும் வயிற்றில் புண்ணுண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகின்றது.

வயிற்றுவலியை நிரந்தரமாகப் போக்குவதற்கு முற்றிய அத்தியிலை _ 100 கி, வேப்பிலை _ 100 கி, கீழாநெல்லி இலை _ 100 கி, குப்பைமேனி இலை _ 100 கி, ஆகியவற்றைச் சேகரித்து, நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளையும், (உணவிற்கு முன்னால்) 5 கிராம் தூளை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறி பூரண குணம் பெறலாம்.

தொகுப்பு: மா. பிரபா
nantri - Kumuthamhealth

ஒற்றைத் தலைவலி (Migraine)


உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.

அறிகுறிகள்:

மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.

படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

வகைகள்

ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைகளில் அறியப்படுவதாக உள்ளது.

1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)

தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

பொதுவான மைக்ரேன்: (Common migraine)

மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?

ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்_மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75% வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50% வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.

விடுதலைபெற நம்பிக்கையான வழிகள்:

அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல்

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்து வர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதுகுவலிக்கு குட்பை சொல்ல...


இந்தியாவில் எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல் போல முதுகுவலியும் இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருபது வயதிலிருந்து முப்பத்தைந்து வயது வரை உள்ளவர்கள்தான். அதுவும் குறிப்பாக பெண்கள்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

இதனால் இவர்களின் ஆபீஸ் வேலை கெடுவதுடன், மனதளவிலும் பல பாதிப்புகளை அடைகிறார்கள். மனச்சோர்வு, ஒருவித அச்சம் இவர்களைத் தொற்றிக்கொள்கிறது. சமயத்தில் வாழ்க்கையே வெறுத்து விட்டதாகக் கூட முதுகுவலி வந்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அலுவலகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியிருப்பதால், வேலை தொடர்பான பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளதும் மன உளைச்சலுக்கு ஒரு காரணமாகும்.

சிலருக்கு ஐம்பது, அறுபது வயதில் முதுகுவலி வரும். அது வயதாவதால் இருக்கலாம். அல்லது வேறு சில பிரச்னைகளாக இருக்கலாம். எதுவாகயிருந்தாலும் ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் போவது புத்திசாலித்தனம்.

முதுகுவலி ஏன் வருகிறது?

நம் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டது (டிஸ்க் ப் ரொலாப்ஸ்) என்றால்தான் முதுகுவலி வருகிறது.

நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.

சிலர் தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தால்தான் வலி உண்டாகிறது. இதன் அறிகுறியாக சிலருக்கு ஒரு காலிலோ இரு காலிலோ வலி இருக்கும். இடுப்பிலும் வலி தெரியும்.

இந்தத் தவறான நிலை பலநாள் தொடரும்போது ஏற்படும் அழுத்தத்தால் வட்டுக்களிடையே உள்ள பசை வெளியே வந்துவிடும். வெளிவந்த பசையானது மற்ற ஆதார உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியை உண்டாக்குகின்றது. இதைத்தான் டிஸ்க் நழுவிவிட்டது என்கிறார்கள்.

யார் யாருக்கு முதுகுவலி வரும்?

நீண்டதூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகநேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், ஒழுங்கற்ற படுக்கை, சிலவகை மெத்தையில் ((உ_ம்) ஃபோர்ம் மெத்தையில் படுப்பவர்கள்), சக்திக்கு மீறிய கனமான பொருட்களைத் தனியே தூக்குபவர்கள், எந்தப் பொருளை எப்படித் தூக்குவது என்ற விவரம் தெரியாதவர்கள், சரியாக, நேராக உட்காராமல் நீண்ட நேரத்திற்கு ஒரு பக்கமாகவே உட்காருபவர்கள், அல்லது நிற்பவர்கள், மெனோபாஸ் காலப்பெண்கள் ஆகியோருக்கு லேசு லேசாக ஆரம்பிக்கும் முதுகுவலி, கண்டு கொள்ளாமல் விட்டால் அதிக வலியாக மாறி விடக்கூடும். ஆண், பெண் இருவருக்கும் உடலின் எடை கூடுவதும் முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் எடை முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி உண்டாகிறது. இதற்கு நடைப்பயிற்சி அவசியம். நடப்பது நம் முதுகு, இடுப்புத் தசைகளை உறுதியாக்கும்.

பெண்களுக்கு முதுகுவலி அதிகம் வருவது எதனால்?

பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற்கும் சமயம்) காலத்தில் முதுகுவலி வருவதுண்டு. இந்தச் சமயத்தில் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறையும். இதனால்தான் வலி உண்டாகிறது. இதுதான் ஆஸ்டியோ ஃபொரோசிஸ் என்ற எலும்பு முறிவு நோய்க்கும் அறிகுறி. இதைத் தடுக்க பெண்கள் மெனோபாஸ் சமயத்திற்கு முன்பே மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பிஸிஜி (ஹார்மோன் ரீபிபோப்மெண்ட் தெரபி) சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள் :

1. படுக்கையில் கவனம் தேவை :

நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஃபோம் மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் ஃபோம் மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.

2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் :

நீண்டதூரம் இரு சக்கரவாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சேரோடு சேராக உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.

4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.

5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

6. சேரில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.

7. நாம் உட்காரும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும் இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால் சேரில் நன்றாக நிமிர்ந்து இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார வேண்டும். தேவைப்பட்டால் முதுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.

8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும். இரண்டாக வளைந்து குனிந்து பொருட்களை எடுக்கவோ தூக்கவோ கூடாது. கால்களை அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான பொருட்களைக் கைகயில் வைத்துக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக் கூடாது.

9. நடைப்பயிற்சி: உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளைப் பயன்படுத்தவே கூடாது.

முதுகுவலியை சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே கவனம் தேவை. இதனால் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. பயப்படவும் தேவையில்லை.

லேசான வலிகளைக் கவனிக்காமல் விடும்போதுதான் அவை அறுவை சிகிச்சை வரை பெரிதாகி விடுகின்றன. இப்போது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்வது எளிது. ஒரேநாளில் கூட எழுந்து நடக்க முடியும். இந்தநிலை நமக்கு ஏன்? முன்பே எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் நல்லதுதானே. மேலே சொன்ன வழிகள் முதுகுவலியை வரவிடாமல் செய்யும் எளியவழிகள்தான். முயன்று பாருங்கள்.