27 Februar 2006

பல் வலி

_ எஸ். அன்வர்

"பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது.

பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது.

படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், வாக்குவாதம், சண்டை வந்து குடும்ப நிம்மதியையே கெடுத்து விடும்.

இரண்டாவது, 28 வயதில் பற்கள் சொத்தையாகி விட்டதால், யாரிடமும் பல் தெரிய சிரித்துப் பேச முடியவில்லை. தன் முகத்தின் அழகே கெட்டுவிட்டதோ என்ற மனக்கவலை வேறு.

அவரது பற்களைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது சொத்தை விழுந்த இரண்டு பற்களையும் பிடுங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் மற்ற பற்களையும் பதம் பார்த்து விடும் என்று சொல்லி விட்டார்கள்.

சிறு வயது முதல் பற்களைப் பாதுகாக்க மறந்த அவரது அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பதை டாக்டர்கள் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள்.


இதயம், சிறுநீரகம், போன்று பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம், பல் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள், முடக்கு வாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, தோலில் ஒவ்வாமை, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றிற்குக் காரணமானாலும் ஆகலாம்.

பல் சொத்தை ஏன் விழுகிறது?

நம் கடைவாய்ப் பற்களில் உள்ள பள்ளங்களில் உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்வதாலும் அதைச் சரியாக சுத்தம் செய்யாததாலும் பிளாக் எனப்படும் பல்பாசை உண்டாகிறது. இந்தப் பல்பாசை ஒருவகை நுண்ணுயிரிகளுக்கு இடமளிக்கிறது.

இந்தப் பல்பாசை பசைத்தன்மையுடன் விளங்குவதால் நாம் உண்ணும் உணவில் சிறுபகுதி அதில் ஒட்டிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்ளும் இனிப்பு, ஸ்டார்ச் வகை உணவு துணுக்குகளை உண்டு, இனப்பெருக்கம் செய்து வளர்ந்து, லேக்டிக் ஆசிட் எனப்படும் ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. இந்த அமிலங்கள் பல்லின் எனாமலில் சொத்தை ஏற்படுத்தி பிறகு அது மெதுவாக உள்ளே பரவுகிறது. ‘டென்டின்’ என்ற உணர்வுப் பகுதியை அது தாக்கியவுடன் கூச்சமும், லேசான வலியும் உண்டாகிறது.

பல் சொத்தை, அருகில் உள்ள பற்களுக்கும் பரவக் கூடிய வாய்ப்புள்ளதால், பல்லில் நிற மாற்றமோ, கூச்சமோ ஏற்பட்டால் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

முதலுதவி

சாப்பாட்டுத் துகள்கள் குழிக்குள் சிக்கிக் கொண்டால் குண்டூசி, குச்சி, நாக்கு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எடுக்கக் கூடாது. பற்களில் குழி (சொத்தை) இருந்தால் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, இனிப்பானதையோ சாப்பிடும்போது பல் வலி உயிரை எடுக்கும். இளஞ்சூடான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம்.

சிறிய பஞ்சு உருண்டையில் க்ளோவ் ஆயில் விட்டு, அதை குழி உள்ள இடத்தில் கவனமாக வைக்கலாம். வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். இவை யாவும் முதலுதவி மட்டுமே.

உடனே நீங்கள் செய்ய வேண்டியது மருத்துவரைப் பார்த்து, குழியை அடைக்க வேண்டும். அல்லது ரூட்கேனல் ட்ரீட்மெண்ட் எடுத்தாக வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பல்லைப் பிடுங்கி விட்டு புதிய பல்லைக் கட்டிக் கொள்ள வேண்டும். உதடு கடித்தல், நகம் கடித்தல், பல் குத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.

நீங்கள் சிரிக்கும்போது மற்றவர்கள் பயப்படாமல் இருக்க இவை உதவக் கூடும்.

பிரபல பல் நோய்கள் நிபுணர் டாக்டர் என்.வி. ஆறுமுகம் தரும் விளக்கம் :

ஈறுகளிலிருந்து ரத்தம் கசிவது எதனால்?

பாக்டீரியாக்களால் ஈறுகளில் ஏற்படும் ‘இன்ஃபெக்ஜன்’ தான் இதற்குக் காரணம். உணவுத்துÊகள்கள் ஈறுகளில் போய் ஒட்டிக் கொள்ளும்போது ரசாயன மாற்றம் நடக்கும். இதனால் ஈறுகளில் ரத்தம் வரும். உடலில் ஹார்மோன் மாற்றம் காரணமாக பெண்கள் வயதுக்கு வரும் போதும், கர்ப்பக் காலத்தின்போதும் ஈறுகளில் ரத்தம் வருவதுண்டு.

ஈறுகளில் வலி வரும்போது, ‘க்ளோவ் ஆயில்’ வைக்கலாமா?

தவறில்லை. ஆனால், இது தற்காலிக நிவாரணம்தான். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றக் கூடாது. இதனால் ஈறு வெந்துவிடும் ஆபத்து உண்டு.

பற்களைப் பிடுங்குவதால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுமா?

இது தவறு. பற்களுக்கும் மூளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஏதேனும் நோய்க்கான அறிகுறிதான் பல்வலியா?

சைனஸ் இன்ஃபெக்ஜனாக இருந்தால் மேல் கடவாய்ப் பற்களில் வலி எடுக்கும். மிகவும் அரிதாக, மாரடைப்பின் போது, கீழ்த்தாடையின் இடப்பக்கம் வலி வரும்.

டயாபடீஸ், இதய நோய் இருப்பவர்களுக்கு பற்களில் பாதிப்பு வருமா?

சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். அதனால் கவனம் தேவை. பொதுவாக இதய நோயாளிகளுக்கு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை சிபாரிசு செய்யப்படுவதுண்டு. அதனால் பற்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, பல் டாக்டரிடம் எடுத்துக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி தெளிவுபடுத்த வேண்டும். இது முக்கியம்.

பற்களில் ‘க்ளிப்’ மாட்டுவது நல்லதா?

நல்லது. பார்க்கவும் அழகாக இருக்கும்.

_ எஸ். அன்வர்
Quelle - Kumutham

நீரிழிவு


நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரசினையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம். நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதன் விளைவாகத் தோன்றும் சிக்கல்களே மிகக் கடுமையானவை. குறிப்பாகக் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் பெருமளவுக்குக் கட்டுப்பாடற்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவினால் வரும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உணவு உண்ணும் முறைகளை மிக இயல்பான வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ என்பதன் உண்மையான பொருள்.

நீரிழிவு உணவுக் கட்டுப்பாடு என்பது, சத்துள்ள உணவு, சரியான அளவு, சரியான நேரத்திற்கு உட்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோய்க்குரிய உணவு முறை மிகவும் ஆரோக்கியமானதாகும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் இவ்வுணவு முறை மற்றும் சமையல் செய்யும் முறை மூலம் பயன் உண்டாகும்.

அரிசி உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று ஒரு தவறான கருத்து, நீரிழிவுக்காரர்களிடம் நிலவி வருகிறது. அரிசி, கோதுமை, ராகி, பாஜ்ரா போன்ற தானியங்களில் 70_75% கார்போ ஹைட்ரேட் அடங்கியிருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட உணவை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பல நீரிழிவு நோயாளிகள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால், அது உணவு பரிந்துரையாளர் (Dietician) கொடுக்கப்பட்டுள்ள உணவின் அளவுப்படி, உணவு உட்கொள்ளும் பொழுது, துல்லியமாக அளந்து சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று என்பதுதான். ஆனால், நீங்கள் உணவை அளந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தினசரி உட்கொள்ளும் அளவை விட, குறைவாகச் சாப்பிட்டால் போதும்.

உணவு உட்கொள்ளும் பொழுது வயிறு நிறைய உணவு உண்ணுதல் தவறு. அதற்குப் பதிலாக, மூன்றில் ஒரு பங்கு உணவும், மற்றொரு பங்கு தண்ணீரும், மற்றொரு பங்கு வயிற்றைக் காலியாக வைப்பதும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் திட்டமிட்ட அளவான, சமநிலையான சத்து அடங்கிய உணவை மற்றவர்களைப் போல உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீரிழிவு உள்ளவர்கள் அவர்களின் தினசரி உணவு முறையில் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள கோதுமை, அரிசி, ராகி மற்றும் பல தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் சத்துள்ள தானியங்கள், நாற்சத்து உள்ள உணவு வகைகள், மற்றும் பல சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய் வகைகள், மற்றும் கால்ஷியம் சத்துள்ள பால், மாமிச வகைகள், வாரத்தில் இருமுறை குறைவான அளவில் எண்ணெய், இவை அனைத்தும் தினசரி உணவில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பழங்கள் உண்ணுதல் தவறு இல்லை. எனினும், ஒரு சில பழங்கள் அதாவது வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களின் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகமான அளவில் உட்கொண்டால், அவை ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை உயர்த்தக்கூடும். அதனால் ஆரஞ்சு, மோசம்பி, பப்பாளி, ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ரெட் மீட் அதாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்ற உணவு வகையில் சச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். ஆதலால் இவைகளைத் தவிர்ப்பது (அல்லது) மிகவும் அபூர்வமாக உண்ணுதல் என்பது நல்லது. சிறுநீரகம் செயலிழந்து போவதற்கு நீரிழிவு நோயே பெரும்பாலும் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் மிகவும் அவசியமானது. உணவு முறைகளில் மாற்றங்கள் என்று பார்க்கும்போது, புரோட்டீன் சத்தைக் குறைப்பது என்பது சிறுநீரகப் பிரசிசனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்றால் உப்பு. அதாவது தினமும் உட்கொள்ளும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும். 35g/per day என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் குறைத்து விட வேண்டும். பொட்டாஷியம் அதிக அளவில் உள்ள உணவு வகைகள் இளநீர், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், ரெட் மீட் (beat, pork, meat) மற்றும் சில பழங்கள் (Mango, Amla, Sapota, Lemon etc) சில காய் வகைகள், (தண்டு கீரை, பசலை கீரை, மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக் கீரை, பீன்ஸ், முருங்கைக்காய்).

நீரிழிவு நோய் உள்ளவர்களில் பலர் உணவுக் கட்டுப்பாடு பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உணவு பரிந்துரையாளரின் ஆலோசனைகளைப் பெறத் தேவையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், நோயாளிகளை அணுகி அவர்களின் உடல் பருமன், சர்க்கரையின் அளவு, கொழுப்பு மற்றும் சிறுநீரகம் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையை ஒவ்வொரு நோயாளிகளின் தேவைக்கு ஏற்றார்போல் கூறுவது உணவு பரிந்துரையாளரின் பணியாகும். இவற்றைப் பொதுவான முறையில் மட்டும் கொடுப்பது போதுமானது அன்று.

பல அறிக்கைகளைப் பார்க்கும் போது, மக்கள் சிலர் ஒரு நாளில் 2_3 சர்விங் காய்வகைகள் மற்றும் 1 சர்விங் பழங்கள் உட்கொள்பவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற பிரசினைகள் வரும் வாய்ப்பு குறைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உணவு வகைகளில் எண்ணெயின் அளவைக் குறைப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம்.

கொழுப்பு இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சச்சுரேடட் மற்றும் அண்சச்சுரேடட் என்பதாகும். சச்சுரேடட் கொழுப்பு அடங்கியுள்ள உணவு வகைகள் (நெய், வெண்ணெய், கீர், மாமிசம், முழு பால் க்ரீம்) மற்றும் பல காய் வகைகளில் உள்ள எண்ணெய்கள், (தேங்காய் எண்ணெய், பாமாயில்) ஹைடோரோஜினேட்டட் (Hydrogenated) கொழுப்பு அடங்கியுள்ள வகைகள் (வனஸ்பதி, மார்கிரேன்) இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் கெட்டியான பதத்தில் இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.

அண்சச்சுரேடட் கொழுப்பானது பாலிஅண்செச்சுரேடட் மற்றும் மேனோ அண்செச்சுரேடட் என்று பிரிக்கலாம். இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் நீர் பதத்தில் இருக்கும். இவை (சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், எள் எண்ணெய், மற்றும் ஆலிங் எண்ணை) வகைகளில் உள்ளன. மற்றும் ஆலிவ் போன்ற பருப்பு வகைகளிலும் உள்ளன.

பல விளம்பரங்களிலும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது, பாதுகாப்பானது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் எல்லாவிதமான எண்ணெய்களையும் உபயோகிக்கலாம். ஆனால், குறைந்த அளவில் உபயோகிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா விதமான எண்ணெய் வகைகள் அதிக அளவான கலோரியைக் கொண்டது. அவை சர்க்கரையை மற்றும் கொழுப்பையும் நம் உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் உபயோகிக்கும் எண்ணெயின் அளவு லு கிலோகிராம் ஆக இருக்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கலோரியன் அளவை கணக்கிடுகையில் அந்த நபரின் எடை கூடுதலாக வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது அதே எடையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து, அணுகி கலோரியின் அளவைக் குறிக்கவேண்டும்.

சரியான உடல் எடையைத் (Ideal body weight) தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. முதலில் உயரத்தை சென்டிமீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உடல் எடை = உயரம் (செ.மீ) 100 x 0.9

(Ideal body weight = Height (in cms) 100 x0.9)

சரியான உடல் எடையைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு 25kcal/kg உடல் எடை தேவைப்படும். அவர்கள் சரியான உடல் எடையைப் பராமரிக்க உதவும். சரியான உடல் எடைக்கு அதிமாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (over weight) 20 kcal/kg உடல் எடை தேவைப்படும். மற்றும் சரியான உடல் எடையை விடக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு (weight) 3035 kcal/kg உடல் எடை தேவைப்படும்.

இவ்வாறு உணவுக் கட்டுப்பாட்டில் கலோரி கன்டென்ட் எல்லா நீரிழிவு நோயாளிகளின் எடைக்கும் ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். அதனால் சரியான எடையுள்ள நபர்களாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாடு அமைக்கவேண்டும். இதனால் அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தக் குறையும் இன்றி இருக்கவேண்டும்.

தினசரி உணவு முறை திட்டத்தின்படி மொத்த கலோரிகள் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது மொத்த கலோரியில் மாவுச்சத்து 6065% புரதச்சத்து (protein) 15 to 20% மற்றும் கொழுப்புச்சத்து (Fat) 15 to 25% இப்படியாக பகிர்ந்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளை அணுகும் போது அவர்களின் உணவு முறை, மதம் (சமூகம்) வசதி, இவற்றிற்கேற்ப பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் புரியும் அளவில் மற்றும் எளிதான முறையில் கூறப்படுதல் வேண்டும்.

quelle - kumutham health

உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்

- யாணன் -

"உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!" என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!

காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்... இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளன.

‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம், உப்புத்தான்’ என்று மருத்துவர்கள் அடித்துச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘‘இந்தியர்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவேயில்லை’’ என்று வருத்தத்தோடு கூறும் பிரபல நெப்ரோலஜிஸ்ட் மருத்துவர் பி.ரவிச்சந்திரன், உப்பு பற்றிய விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். ‘மனித ஆரோக்கியத்திற்கு எதிராக உப்பு எவ்வாறு செயல்படுகிறது’ என்பதை விரிவாகவே விளக்கினார்.

‘‘ஆதிகால மனிதர்கள் கடல் உப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஏன், இன்னமும் விலங்குகளுக்குத் தெரியாதது, இந்த உப்பு. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள்தான் கடல் நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்தெடுத்தார்கள். அவர்கள் மொழியில் (Natron) நேட்ரான் என்று பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு, அதாவது ‘மம்மி’க்களைப் பாடம் செய்ய உப்பைப் பயன்படுத்தினார்கள். ஆதிகாலத்தில் வேட்டையாடுதல், போர்செய்தல் என்று வாழ்ந்த மனிதர்களுக்கு சோடியம் உப்பின் அறிமுகம், ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அப்புறம், அது தேவையாகவும் மாறிவிட்டது.

உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்ட அன்றைய வாழ்க்கை முறையால், உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறியது. இதனால் ரத்தத்தில் இருந்த சோடியம் உப்பின் சமநிலை அடிக்கடிக் குறைந்தது. போர்க்களத்தில் உடல் சோர்ந்து விழுவார்கள், வீரர்கள். அந்தச் சமயங்களில் அவர்கள் கையில் உப்புக்கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடனேயே, அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று எழுவார்கள். இதனால் அந்தக் காலங்களில் உப்பு, தங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி, பழங்காலத்தில் பிரமாண்டமான வரவேற்போடு மனித வாழ்க்கையில் நுழைந்த சோடியம் உப்புதான், இப்போது அதே மனித இனத்திற்கு விஷமாகவும் மாறியிருக்கிறது!’’ என்று நிறுத்தியவர், ‘எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? என்பதை சற்று விரிவாகவே கூற ஆரம்பித்தார்...

‘‘மனித உடலுக்கு மிக அடிப்படையாக, நான்கு வித உப்புகள் தேவை. அவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகும். இதில் பொட்டாசியத்தையோ, மெக்னீசியத்தையோ, கால்சியத்தையோ உப்பு வடிவில் பிரித்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளாத நாம், சோடியம் உப்பை மட்டும் கடல் நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் படுவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப் பழகினோம்.

விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்குநாள் மனித வாழ்க்கையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. எப்போதும் உட்கார்ந்த நிலையிலும், ஏ.சி. அறையிலும் வேலை என்பது ஒரு பிரிவினரின் வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பு... வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும். (இது தான் ‘உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம்) உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத்தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும். உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால்... உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். முக்கியமாக, சிற்றின்ப உறவு தோல்வியடையும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம். மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது!’’ என்கிறார், அவர்.

கடல் உப்புக்கு மாற்றாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் பாறைவடிவில் கிடைக்கக் கூடியது. இதில் சோடியம் மிக மிகக் குறைவாகவும், சல்ஃபர், மெக்னீசியம், கால்சியம் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உப்பை வட இந்தியாவில் பணக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம், அத்தனை விலை.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்கள் மற்றும் பால் இவற்றில் சேர்க்கப்படும் சோடியத்தின் அளவை, அதன் அட்டையில் அச்சிட வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சோடியம் இல்லாத பொட்டாசியம் உப்புத்தூவிய உருளைக்கிழங்கு Chipsம், அங்கே விற்பனையில் இருக்கிறது. அதேபோல் கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், புரோட்டீன்ஸ் அடங்கிய கோரல் உப்பு (coralsalt) ஜப்பான், அமெரிக்காவில் பிரபலம்.

ஆனால், நம் நாட்டிலோ சில பாக்கெட் பால்களில் கூட 0.3 கிராம் வரை சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. பல வீடுகளில் பாக்கெட் பாலில் போடப்படும் டீ, காபி கூட மெல்லிய கரிப்புச்சுவையோடு இருப்பதற்கு இதுதான் காரணம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்ஸ், மற்றும் சாக்லேட்டுகளிலும் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதன் அளவை வெளிநாடுகளில் உள்ளதுபோல இங்கே நுகர்வோருக்குத் தெரிவிப்பதில்லை.

பிரபலமான குளிர்பானங்கள் அனைத்திலும் சோடியம் சல்பேட் சேருகிறது. கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகைகளில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

ஆனால், ‘பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக வெறும் இரண்டு கிராம் உப்பே போதும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அவன் சுவையாகச் சாப்பிடும் பொருள்களின் மூலம் இரண்டு கிராமைவிட அதிகமாகச் சேருகிறது. இப்படி உப்பின் அளவு கூடுவதினால், ஆண்மை பலம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகள்கூட குறைந்துவிடுகின்றனவாம்.

இதுதொடர்பாக, பதிலளிக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் ‘‘சோடியம் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியது, மனித விந்தில் மெக்னீசியம், கால்சியம்தான் மிகுதியாக இருக்கிறது. உடலில் சோடியம் கூடும்போது... உயிர் அணுக்களை அது பாதிக்கும் என்பது உண்மையே. அனைத்துத் தாவர விதைகளிலும் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற தாவர விதைகளை அரைத்துத்தான் ஆண்மை லேகியம் செய்து விற்கிறார்கள். அதன் ரகசியம் மெக்னீசியம்தான். விதைகளில் அதிக சக்தி கொண்டது முருங்கையும், பூசணியும்! வெற்றிலை என்பது மெக்னீசியம். அதில் தடவப்படும் சுண்ணாம்பில் கால்சியம். அதனால்தான் தாம்பூலம் என்பது இல்லற வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்பட்டது!’’ என்றார்.

அயோடின் கலந்த உப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கும் அவர், ‘‘அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், அதிக அயோடின் சத்துக் கிடைக்கும் என சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அயோடின் என்பது இரண்டு பக்கக் கத்தி போன்றது. அது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. சில விதமான கேன்சர், தைராய்டு பிரச்னைகளுக்குக் கூடுதல் அயோடினே காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அத்துடன், நமது உடலுக்குள் நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாக்கில் சுவை மொட்டுக்கள் நன்கு செயல்படும் என்பதால்.... சிறுவயது முதலேயே குறைந்த உப்புச் சுவையே அவர்களுக்குப் பழக்க வேண்டும். கூடியவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் சோடியத்தின் அளவைக் கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். கசப்புச் சுவை உள்ள காய்கறிகளான பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, பச்சை நிறக் கீரைகள், மற்றும் மோர், இளநீர் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம், பொட்டாசியம் கால்சியம் போன்ற உப்புக்கள் நம் உடலில் இயற்கையாகவே சேர்ந்து விடும்.

அதோடு, அன்றாடம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது வியர்வைச் சுரப்பிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கவும் வேண்டும்!’’ என்கிறார்.

இது மட்டுமல்ல, பெரிய பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்து, அந்த உப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, கடைகளில் கிடைக்கும் சாதாரண கல் உப்பை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்லது. காரணம், பாக்கெட் உப்புகளில் 99 சதவிகிதம் வரை சோடியம் இருக்கிறது. கல் உப்பில் 40 சதவிகிதம் வரைதான் சோடியம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

ஆகமொத்தத்தில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்’ என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.

Quelle - Kumutham Reporter

டெங்கு காய்ச்சல்

-மருத்துவர் ப.செல்வராஜன்-

மழைக்காலத்தில் நாம் கண்டு பயப்படும் இன்னொரு நோய் டெங்கு காய்ச்சல். அறுபதுகளின் துவக்கத்தில் ‘டிங்கி’ ஜுரம் என அறிமுகமான இந்நோய் வந்த சீசனில்தான் ‘‘ஸ்டவ் ஜோசியம்’’ என்பதும் அறிமுகமானது. ‘டிங்கி’ என்ற பெயரால் பல நகைச்சுவைத் துணுக்குகள் உருவாயின. ஆனால், அதன் சரியான பெயர் ‘டெங்கு’ என்பதே.

இந்நோய் ஏற்படக் காரணமாக உள்ளது டெங்கு நுண்ணியே. (நுண்ணி என்பது வைரஸ்தாங்க.... தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் நுண்கிருமி என்றால் பாக்டீரியா, அதிநுண்கிருமி என்பது வைரஸ் அதாவது நுண்ணி என்கிறார்கள்)

இவை ஊன்நீர் வகைகளாகப் (Serotypes) பிரித்தால் நான்கு வகைப்படும். அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? அதைப் பிறகு சொல்கிறேன். இவை வயது, பால், இனம் ஆகிய வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் ஒன்றாகத் தாக்கும்.

இவற்றைப் பரப்பும் கொசுக்களை ‘ஈடஸ் ஈஜிப்டை’ என்கிறார்கள். இவை பகல் நேரத்தில் கடிப்பவை. அதனால் நமக்குத் தெரியும். மழை நீரில் அல்லது குளிர்சாதனப் பெட்டி (ரிஃபிரி ஜிரேட்டர்), ஏ.சி ஆகியவற்றில் தேங்கும் சிறிதளவு நீரில்கூட கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகிவிடும். நகர்ப்புறங்களில் சிறு பாத்திரங்களில் இவை பெருகி, நோயைப் பரப்புகின்றன.
சாதாரணமாக, மருத்துவர்களிடம் ஜுரம் என்று போனால் மழைக்காலத்தில் ‘‘இதெல்லாம் வைரஸ் ஃபீவர் (viral fever)’’ என்பார்கள். ‘‘அதுக்குப் போய் ‘டெஸ்ட்’ எல்லாம் பண்ண வேண்டாம்.... போய் மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க!’’ என்பார்கள்

அந்த ‘வைரஸ் ஃபீவர்’ தான் டெங்கு. பொதுவாக ஒரு நாள் காய்ச்சலுக்கே, என்ன சோதனை செய்யலாம் என வரைமுறைகள் உள்ளன. நம் ஊரில் ‘‘எதுக்கும் எல்லாம் பாத்துடலாமே, டாக்டர்’’ என்று நோயாளிகள் தாமே முடிவு செய்வது தவறு.

முதல் நாள் காய்ச்சலில் ஒரே ஒரு சோதனை போதும். (உச்சி முதல் பாதம் வரை மருத்துவர் சோதித்தாலே பல முறை காரணம் புரியலாம்). குளிர் அல்லது கடுமையான தலைவலி ஏற்பட்டால் மலேரியா உள்ளதா எனச் சோதிக்கலாம். அது ஒன்று மட்டுமே ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கக் கூடும்.

டெங்குதானா என உறுதி செய்வது, அவசியமற்றது. அதற்கென பணம் செலவழிப்பது வீண். ஏனெனில், டெங்கு காய்ச்சலுக்கென தனிப்பட்ட மருந்துகள் ஏதும் கிடையாது. வெறும் பக்கபலம் தரும் சிகிச்சை மட்டுமே போதும். மேலும் 15 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே _ அதிலும் 5% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே உயிருக்குத் தீங்கு ஏற்படும் அளவு பாதிப்பு ஏற்படலாம்.

நோய்க் குறிகள்:

1) நோய்த் தடுப்பாற்றல் இல்லாதவர்களிடம் ஏற்படுவதை (classic dengue) ‘‘முறையான டெங்கு’’ என்கிறார்கள். இந்நோய் வெளிநாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்து தங்கும் இளவயதினரையும் குழந்தைகளையும் தாக்குவது. உடலில் நுண்ணி புகுந்து 5_8 நாட்கள் சும்மா இருந்து, பிறகு கண்ணீர்க் கசிவு, தடிமன் என வேலை காட்டும். இதற்குச் சில மணி நேரங்கள் கழித்து திடீரென உடம்பை முறிக்கும் வலி, கண்களின் பின்புறத்தில் வலி, பொறுக்க முடியாத தலைவலி மற்றும் கால், கை மூட்டுகளில் வலி ஆகியன ஏற்படும்.

உடல் அசைவினால் தலைவலி கூடும். சிலருக்கு வெளிச்சத்தையே பார்க்க முடியாத அளவு கண்கள் கூசலாம். உடல் நடுக்கமும் குளிரும் சற்று தாமதமாக வரலாம். இவை தவிர, தூக்கம் வராமலும், பசி இன்றி வாய் கசந்து போய், உடல் பலவீனம் அடைந்து அவதிப்படவும் நேரும். கால்வாசி பேருக்குத் தொண்டையிலும், மூக்கிலும் அழற்சி ஏற்படும்.

முக்கியமான விஷயம்: டெங்கு காய்ச்சலின்போது இருமல் மட்டும் வருவதே இல்லை.

மருத்துவச் சோதனையின் போது, கண்கோளங்களைத் தொட்டால் வலி ஏற்படுவது தெரியும். உடலில் ஆங்காங்கே நிணநீர் முண்டுகள் வீக்கமுற்றுக் காணப்படும்.

பாதி பேருக்கு, நாக்கின் பின்புறம் சிறிய வேர்க்குரு போன்ற குமிழ்கள் ஏற்படும். நாக்கின் மேல் மாவு போன்ற கோழைப் படிந்திருக்கும். மார்பிலும், கரங்களின் உட்பகுதிகளிலும் தோல் சிவந்து காணப்பட்டாலும், இவை சில நாட்களில் மறைந்து விடும். அதன்பிறகு, தடித்த அல்லது சிறு கொப்பளங்களோடு தோல் சிவக்கலாம். இவை 3_5 நாட்களில் தோன்றி, உடல் முழுவதும் பரவலாம்.

2_3 நாட்களில் காய்ச்சல் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிடக் கூடும். மற்ற நோய்க்குறிகள் அனைத்தும் மறைந்து போய் விடும்.

ஆனால், அனைத்துமே 2_3 நாட்களில் மறுபடியும் வந்து விடும்.

இது டெங்கு காய்ச்சலின் தனிப்பட்ட குணநலன் ஆகும்.

அதிர்ஷ்டவசமாக, இத்தகைய classic dengue அதிகம் காணப்படுவதில்லை. நோய்க்குப் பிறகு, பல வாரங்களுக்கு உடல் சோர்வு நீடிக்கும்.

2) இரண்டாவது வகை, சற்றுக் கடுமை குறைந்த நோய் வகையாகும். இதில் காய்ச்சல், பசியின்மை தலைவலி மற்றும் உடல்வலி ஆகியன இருக்கும். லேசான தோல் சிவத்தல் காணப்படும். நிணநீர் முண்டுகள் பாதிப்படைவதில்லை. 3 நாட்களில் உடல் முழுவதும் தேறிவிடும். (நம் ஊரில் காணும் ‘வைரஸ் ஃபீவர்’ இந்த வகையைச் சேர்ந்ததுதான்).

3) இவற்றையெல்லாம் விட அச்சுறுத்தும் ஒன்று ‘டெங்கு குருதிக் கசிவு காய்ச்சல்’ (dengue hemorrhagic fever) எனப்படும் மூன்றாவது வகையாகும்.

இதைப்பார்த்துதான் நாம் மிரண்டு போகிறோம். (தண்ணீர்ப் பாம்புகளைக் கூட நாகப் பாம்பு என அடித்துக் கொல்வதும் அலறி ஓடுவதும் போல்தான் இது).

இது குழந்தைகளை, அதாவது 15 வயதிற்குட்பட்டவர்களை மட்டுமே பாதிக்கிறது. இருபாலரையும் ஒரே அளவில் தாக்குகிறது.

நோய்க்குறிகள்:

துவக்க நிலையில் காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, பசியின்மை, குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுவலி ஆகியன ஏற்படும். 2_4 நாட்கள் வரை இது நீடிக்கும். ஆனால், classic dengue போல், தசை வலி, மூட்டு வலி மற்றும் எலும்பு வலி ஆகியன இராது.

சோதித்துப் பார்க்கையில் 38.30 to 40.60 (1010F _ 1050F) காய்ச்சல், உள் நாக்கும் தொண்டையும் சிவந்த நிலை தவிர, நிணநீர் முண்டுகள் மற்றும் கல்லீரல் வீங்கியிருப்பது தெரிய வரும்.

துவக்க நிலையை அடுத்து, உடல் நிலை வெகு துரிதமாக மோசமடையும். உடல் சோர்வு மிகவும் அதிகரிக்கும். கை கால்கள் சில்லிட்ட போதும், உடல் மட்டும் வெப்பம் கொண்டிருக்கும். நெற்றியிலும், கைகால் விரல் முனைகளிலும் புள்ளி புள்ளியாக குருதிக் கசிவு (petechiae) ஏற்படும். சில சமயம், தோலில் தடிப்புகள் அல்லது சிறு கொப்புளங்கள் தோன்றும். கை கால்கள் நீலமாகக் கூடும். இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைந்துபோகும்.

4_5_வது நாளில்தான் பெரும் உயிர் இழப்பு நேருகிறது. ரத்த வாந்தி, கருத்த நிறத்தில் மலப்போக்கு, ஆழ்மயக்கநிலை மற்றும் உடன் தேறாத அதிர்வு நிலை ஆகியன கவலையளிக்கும் அறிகுறிகள். மூச்சுத் திணறல், உடல் நீலம் ஆதல், வலிப்புகள் ஆகியன இறுதிக் கட்டத்தில் காணப்படும்.

சிகிச்சை : டெங்குவுக்கென தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. ரத்தச் சுழற்சி துவண்டு விடாமல் இருக்குமளவு நீரை உள்ளே செலுத்த வேண்டும்.

காய்ச்சலைக் குறைக்க போதிய அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருதிக் கசிவு ஏற்பட வட்டணுக்கள் (platelets) குறைவதே காரணம் என்பதால், அவற்றை ஈடுசெய்ய ரத்தம் _ குறிப்பாக, வட்டணுக்கள் மட்டும் _ செலுத்த வேண்டியிருக்கும்.

வட்டணுக்கள் சாதாரணமாக 2.0 லட்சம் முதல் 2.5 லட்சம் மி.மீ3 என்ற அளவில் இருக்கும். அவை, ரத்தக் கசிவு உடலில் ஏற்படாமல் தடுப்பவை. அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறையும்போது குருதிக் கசிவு ஏற்படுகிறது.

மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை

ஆய்வுக்கூட சோதனைகள்: டெங்குவுக் கென உடலில் தோன்றும் காப்பு மூலங்களின் அளவுகளைக் (Igm Anti Body) கொண்டு, டெங்குதானா என உறுதி செய்யலாம். இது வழக்கமாக எல்லா காய்ச்சல் வந்தவர்களுக்கும் செய்வது தேவை இல்லை. பணம்தான் வீணாகச் செலவாகும்.

2) வட்டணுக்களின் எண்ணிக்கை: இது குறையும் போது, ரத்தம் செலுத்த வேண்டி இருக்கலாம்.

தடுப்பு முறைகள்: டெங்குவுக்கென தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை வெற்றி கிட்டவில்லை.

நிச்சயமான ஒரே தடுப்புமுறை, கொசுக்களை ஒழிக்கும் முறையே. மழைநீரையும், வீடுகளில் தேங்கும் நீரையும் அவ்வப்போது ஒழிப்பது மட்டுமே.

அவசியமான அச்சுறுத்தல்: ஒருமுறை டெங்குவினால் பாதிப்புற்ற பிறகு, தடுப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால், அடுத்த முறை 4 ஊன்நீர் வகைகளில் வேறொரு வகை, டெங்கு நுண்ணி தாக்கும்போது, உடற்காப்பு மூலம் விளைவிக்கும் செயல்களால் மட்டுமே பெரும் தீங்குகள் ஏற்படும்.

அதாவது, நம்மைக் காப்பதற்கென்று உள்ள காவல்துறை, வீட்டில் திருடன் நுழைந்ததற்காக வீட்டையே கொளுத்துவது போன்ற விளைவுகள் ஏற்படும். இந்நிலை பெரும்பாலும் உடல் பலம் குறைவான குழந்தைகளில் _ அதாவது நோஞ்சான்களிடம் _ ஏற்படுவதில்லை. நல்ல திடகாத்திரமான குழந்தைகளே பாதிப்புறுகின்றன. எனவே, நடுத்தர மற்றும் உயர்மட்ட வசதி கொண்ட குடும்பத்தினர் ‘டெங்கு’ என்றால் அலறுவது நியாயம்தான்! ஆனால், கொசுக்களை ஒழிப்பது நாமும் பங்கேற்க வேண்டிய ஒரு பொது நல சேவை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சீனாவில் மா சே துங் ஆட்சி துவங்கியபோது கொசுக்கள், பூச்சிகள், எலிகள் இவற்றைக் கொல்வது நம் தலையாய கடமை என்றவுடன், மக்கள் வெளுத்து வாங்கியதில், ‘சுற்றுச் சூழல் சமநிலை இழப்பே (Ecological imbalance) வந்து விட்டது என்கிறார்கள். அந்த அளவு இல்லா விட்டாலும், கொஞ்சமாவது நாம் செயல்படலாம்... என்ன சார், சொல்றீங்க?...

Quelle - Kumutham Health (Dec 2005)

தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி?

- எஸ். அன்வர் -

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.

உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.

1. தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் :
ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு ஒப்பான கருத்து இது. இதற்குச் சரியாகப் பதில் சொல்வது கடினம். அதுபோல்தான் தூக்கமும். தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருநாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறுமணி நேரத் தூக்கம் அவசியம். இந்த நேரம் குறைந்தால், இதய நோய் அல்லது கான்சர் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை ‘டயரி’யில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன்படி எழுந்திருக்கும் _ தூங்கும் நேரத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நோட் பண்ணுவது அவசியம். தூக்க ஊக்கிகள் பயன்படுத்தாமல் தூக்கம் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.

2. பிற்பகல் விழாவில் போர் அடிக்கும் பேச்சைக் கேட்டவுடன் தூக்கம்.
இது இயல்பாக வருவதுதான். ஆனால் ஒரு சிலருக்குத் தூக்கம் வராது. இமைகள் மூடியிருப்பது போல் தோன்றும். ஆனால், தூக்கம் கண்களைத் தழுவாது. தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் இருந்தாலும், மீதியிருக்கும் ஒருமணி நேரத்தை உடல் ஈடு செய்ய விரும்பும். சிலர் அதனை ஈடு செய்யும் விதமாகப் பகலில் குட்டித் தூக்கம் போடுவார்கள். இருப்பினும் நாள்பட்ட தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால், டயாபடீஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.

3. தூக்கமின்மை இருந்தால், சீக்கிரம் படுக்கச் செல்ல வேண்டும்.
பொதுவாக தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள். தூக்கம் வரவில்லையே என்பதற்காகப் படுக்கை அறைக்குச் செல்லவே சிலர் விரும்புவதில்லை. நமக்குத்தான் தூக்கம் வருவதில்லையே என்ற எரிச்சல். இது தவறு. மாறாக தூக்கமின்மைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு டென்ஷன்... உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்குப் பொதுவான காரணங்கள்.

என்ன செய்யலாம்?
வழக்கத்தை விட, ஒரு மணிநேரம் ‘லேட்’டாகப் படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக எண்களை மனதிற்குள் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது...
சுவாரஸ்யமில்லாத புத்தகங்கள் படிப்பது..,

படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதன்மூலம் தசைகள் இலகுவடையும். உடல்சூடு குறையும்.

தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

குட்டித் தூக்கம் : தூக்கமின்மை இருப்பவர்களுக்கு அவ்வப்போது ‘குட்டித் தூக்கம்’ வரும். இதனால் ஓரளவு சமாதானம் அடையலாம். இரவு ‘ஷிஃப்’டில் வேலை செய்பவர்களுக்கு, தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் குட்டித் தூக்கம் போடுவதில் தவறில்லை. அதற்காக, பலமணி நேரம் ‘குட்டித் தூக்கம் போடாமல் இருப்பது நல்லது.

தூக்கமின்மை இருந்தும், பணிகள் பாதிப்பதில்லை :
இரவில் இரண்டு மணி நேரத் தூக்கம் பாதித்தால், மறுநாள் உடலில் அசதி ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. பெரிய இயந்திரங்களை இயக்குபவர்களாக இருந்தால், முடியாமல் போகும். டூ வீலர் அல்லது கார்களை ஓட்ட முடியாது. அதனால் ஆபீஸ் போவதற்கு நண்பர்களின் உதவியைக் கேட்கலாம்.

தொடர்ந்து ஒருவாரம் வரை இப்படியே இருந்தால், உடல் சூடு அதிகரிக்கும். அதைத் தவிர்ப்பது முக்கியம்.

வாரத்தின் இறுதி நாட்களில் தான் தூக்கம் வருகிறது.
சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் ஒரு குட்டித் தூக்கம் மட்டும் போடுவது உண்டு. தூக்கமின்மை பாதிப்பு இருப்பவர்கள் தவிர, மற்றவர்களுக்கு இந்த ‘பிராக்டீஸ்’ மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

எத்தனை வேலைப்பளு இருந்தாலும் முடிந்தவரை தினமும் இரவில் தூங்குவது அவசியம். வேறு வழியில்லை என்றால், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிப்பது முக்கியம்.

படுக்கப் போகும் முன்பு உடற்பயிற்சி :
உடற்பயிற்சி காலையில் செய்யலாம். படுக்கப் போகும் முன்பு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இந்த ‘பிராக்டீஸ்’ செய்வதுண்டு. இருப்பினும், தூக்கத்துக்கும், ‘பெட் டைம்’, உடற்பயிற்சிக்கும் சம்பந்தமில்லை. தேவையேற்பட்டால், இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு எளிய உடற்பயிற்சி செய்யலாம். இருப்பினும் முடிந்தவரை காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது.

தூக்கம் வருவதற்கான மாத்திரைகள் எடுப்பது :
தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன்பு மாத்திரைகள் எடுப்பது நல்லது. தவறில்லை. ஆனால், டாக்டர்கள் அட்வைஸ் அவசியம். ஒருசில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக பக்க விளைவுகள் (வாந்தி, தலைவலி, சோர்வு) ஏற்படும். அதனால் கவனம் தேவை.

தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாதல் :
இது ஆபத்து.

இரவில் லேட்டாகத் தூங்கி அதிகாலையில் எழுவது :
நேரமில்லை. நான்கு மணிநேரம் மட்டுமே தூங்க முடியும் என்ற நிலை இருந்தால், இரவில் லேட்டாக (இரண்டு மணி) தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழலாம். இரண்டு மணி வரை தூக்கம் வருவதற்குரிய வழிகளில் இறங்கலாம். (போரடிக்கும் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது இப்படி...)

தூக்கமின்மை இருப்பவர்கள் டாக்டரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். குறிப்பாக,

ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் :
தூக்கமில்லாமல் இருந்தால், காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். கால்களில் நமைச்சல் இருக்கும். ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை டெஸ்ட் செய்வது முக்கியம்.

மூச்சு விடுவதில் சிரமம் :
தூங்கும் போது மூச்சுவிட சிரமப்படுவார்கள். குறட்டைச் சத்தம் அதிகம் கேட்கும். உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

மனச்சோர்வு :
இரவில் தூங்காமல் இருந்தால் மறுநாள் உடல், மன சோர்வு ஏற்படும்.

தைராய்டு சுரப்பதில் பிரச்னை :
இந்த அறிகுறி தெரிந்தால் உடனே டாக்டரிடம் செல்வது அவசியம். தைராய்டு ஸ்டுமுஹேங் ஹார்மோன் அளவு அதிகமிருந்தாலும் தூக்கம் வராது.

- எஸ். அன்வர் -
nantri-kumutham health

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை


தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.

_ கே.எஸ். ராமலிங்கம்
nantri-Kumutham Health

ஆண்களின் மனச்சோர்வு


பார்த்திபனும் கோபியும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். இருவர் வசிப்பதும் அடுத்தடுத்தத் தெருக்களில்தான். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து பெரிய வீதிக்கு வந்தால் போதும், அவர்கள் நிறுவனத்தின் பேருந்து வந்து அவர்களை அழைத்துச் சென்றுவிடும்.
பேருந்தில் கூட இரண்டுபேரும் பெரும்பாலும் அடுத்தடுத்த இருக்கைகளில்தான் உட்கார்ந்து கொள்வார்கள். சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணத்துக்கு அப்புறம்தான் அலுவலகம் வரும். அத்தனை நேரமும் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? பேசிக்கொண்டுதான் செல்வார்கள், உள்ளூர் விஷயங்களில் இருந்து உலக நடப்பு வரை.

ஆனால் போன மாதம் அவர்கள் ஒருவரையருவர் சந்தித்தபோது திடுக்கிட்டனர். அவர்கள் சந்தித்த இடம் அந்த மாதிரி. மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் சென்றிருந்தபோதுதான், அவர்கள் ஒருவரையருவர் பார்க்க நேரிட்டது.

‘‘இவனை நமக்கு நன்கு தெரியும் என்று நினைத்திருந்தோமோ? இவனுக்குமா...?’’ இருவருக்குமே வியப்பாக இருந்தது. பிறகு கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. அதுதானே மனித இயல்பு! நமக்கு இருக்கும் பிரச்னை இன்னொருவருக்கும் இருந்தால், அதில் அற்ப திருப்தி காண்பது.

பார்த்திபனுக்கும் கோபிக்கும் என்னதான் பிரச்னை? இருவருக்கும் தீவிர மனச்சோர்வு அல்லது மன அழுத்தம். ‘டிப்ரஷன்’ என்பார்களே, அதுதான்.

இந்த இடத்தில் மனச்சோர்வை, ஆண்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் குறிப்பாக பார்க்க வேண்டும். மூன்று வருடங்கள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள். தினமும் நிறைய நேரம் பேசிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தவர்கள். ஆனாலும் தங்கள் மனதில் என்ன குறை என்பதை, ஒரு வார்த்தைகூட மற்றவரிடம் வெளிப்படுத்தவில்லை.

பார்த்திபனும் கோபியும் விதிவிலக்குகள் அல்ல. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவார்கள்.

சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சிகள் மனச்சோர்வினால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவரங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்பதும் உண்மை.

என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்கள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த விதங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிக் கூறுவது அயோவா பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவர்களான ராபினோ மற்றும் கோச்ரன் ஆகியோர்கள்தான். இவர்கள் இருவரும் ஆண்களின் மனவியல் சிக்கல்கள் குறித்து பல முக்கிய நூல்களை எழுதியுள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன் ‘அமெரிக்கன் ஜானல் ஆஃப் மெடிகல் ஜெனெடிக்ஸ்’ என்ற இதழில் ஒரு முக்கியமான கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் ஆண்களின் மனச்சோர்வுக்கும் பெண்களின் மனச்சோர்வுக்கும் இடையே மரபணு ரீதியாகவே வேறுபாடுகள் உண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரும் மனச்சோர்வு சிக்கல் தொடர்பான 19 குரோமொசோம் பகுதிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டனர். இவற்றில் மூன்றுதான் சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தது. மற்றவை ஆண்களிடம் ஒருவகை பாதிப்பையும், பெண்களிடம் ஒருவகை பாதிப்பையும் உணர்த்தியது.

ஆண்கள் பொதுவாக அழுவதில்லை. ‘‘ஐய, ஆம்பிளையா இருந்துகிட்டு அழுவாங்களா? போய் புடவை கட்டிக்க’’ என்பதுபோல் கேலி செய்து வளர்க்கும் சமுதாயம் நம்முடையது. பெரும்பாலான நாடுகளில் ஆண்கள் என்றால் கம்பீரம் என்றுதான் அர்த்தம். அரசியல் மாநாட்டில் கண்ணீர் பெருக்கெடுத்த ஓர் அரசியல்கட்சித் தலைவரை இங்கு பத்திரிகைகள் விதவிதமாக கிண்டல் செய்தது நினைவிருக்கலாம்.

அழுவது மட்டுமல்ல, வருத்தத்தை வெளிக்காட்டுவதையே ஆண்கள் கௌரவக் குறைவாக கருதுகிறார்கள். இதனால், மனச்சோர்வு கொண்ட ஆண்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்தான்.

பின் ஆண்களின் மன இறுக்கம் எப்படித்தான் வெளிப்படும்? பெரும்பாலும் உடல்நலக் கோளாறுகளின் மூலம்தான் இது வெளிப்படுகிறது. தலைவலி அதில் முக்கியமானது. வயிற்றுக்கோளாறு இன்னொரு வெளிப்பாடு. இல்லற உறவில் நாட்டம் குறைந்து போவது வேறு ஒருவகை.

மனச்சோர்வு எனும் மனநோயால் பாதிக்கப்படும் ஆண், அடிக்கடி கோபம் கொள்ளலாம். தொட்டதெற்கெல்லாம் எரிந்து விழலாம். அலுவலகத்தில் திடீரென்று வேலை செய்யமுடியாமல் மனம் மரத்துப்போனது போல் இருக்கும். சீரான தூக்கம் இருக்காது.

இப்படியெல்லாம் மாறினார் கிஷோர் என்பவர். பொறுமையே உருவாக இருந்த அவர் தன் நண்பர்களிடம் அடிக்கடி எரிந்து விழுந்தார். படுத்துக்கொண்ட பத்தாவது நிமிடம் தூங்கிவிடும் பழக்கம் உடைய அவர் மணிக்கணக்கில் தூக்கம் வராமல் சிரமப்பட்டார்.

நண்பர் ஒருவர் அவரை கட்டாயப்படுத்தி மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். பலவித கேள்விகள். சோதனைகள். முடிவில் ‘‘உங்களுக்கு டிப்ரஷன். எனவே, அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்’’ என்றார் டாக்டர்.

கிஷோரால் நம்ப முடியவில்லை. ‘‘எனக்கு மனநோயா? சான்ஸே இல்லை’’ என்றார். என்றாலும் டாக்டரும், நண்பரும் வற்புறுத்த சிகிச்சைக்கு சம்மதித்தார்.

இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு ‘‘இப்போது நான் சந்தோஷமாக உணருகிறேன்’’ என்று கூறுகிறார் கிஷோர்.

மனச்சோர்வு என்பது ஏதோ பெண்கள் சம்மந்தப்பட்டது என்ற கருத்து, சமூகத்தில் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் தனக்கு ‘பெண்மைச் சாயல்’ பூசப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் ஆண்கள் ‘‘எனக்கென்ன? நான் நல்லாதான் இருக்கேன்’’ என்று கூறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் அதேசமயம் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறதே என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உள்ளதை வெளிப்படுத்தாமல் இருப்பதும், சிகிச்சைக்கு மறுப்பதும் சிலசமயம் உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம். தீவிர மனச்சோர்வு கொண்ட ஆண்கள் பெண்களை விட அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனும் நிலை அமெரிக்காவில் நிலவுகிறது (ஆனால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிகம் பெண்கள்தான். ‘வெற்றி’ வாய்ப்பில் ஆண்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.

ஆண்களே, உங்களுக்கு மன இறுக்கம் தோன்றி, தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

முதலில் இது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்துவிடவில்லை. மரபணு, சுற்றுப்புற சூழல் (அதாவது உங்களால் கட்டுப்படுத்த இயலாதவை) உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

உடனே மனநல மருத்துவரிடம் ஓட வேண்டும் என்பதில்லை. மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது மாற்றங்களை கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள். ஒரு சின்னச் சுற்றுலா, இடம் மாறுதல், மொட்டை மாடியில் உணவு, அலுவலகத்தில் வேறு திசையில் உங்கள் இறுக்கையை மாற்றிக்கொள்வது போன்ற விஷயங்கள்கூட இதில் உதவலாம்.

மனச்சோர்வு தொடர்ந்தால், உங்கள் குடும்ப டாக்டரை அணுகலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் கூட மனச்சோர்வுக்கு வழி வகுக்கலாம். காரணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாலே மனச்சோர்வு மறைந்துவிடும்.

அப்படியும் மனச்சோர்வு தொடருகிறது என்றால் தயங்காமல் மனநல மருத்துவரையோ, மனவியல் மருத்துவரையோ அணுகுங்கள். அவர்களின் சிகிச்சைக்கு உடன்படுங்கள்.

nantri-Kumutham health

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்


தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.

தோற்றம் :
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.

அடங்கியுள்ள பொருட்கள் :
ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.

மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

குணங்கள் :
இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?
இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

மருத்துவப் பயன்கள்

பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்

அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.

இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.

அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.

அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.

பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.

அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.

அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.

அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.

வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.

அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.

இக்கீரை பித்த நோயை நீக்கும்.

இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.


நன்றி - குமுதம் ஹெல்த்

கடுக்காய்


இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. உடல் உறுதி பெறவும், நோயற்ற வாழ்வைப் பெறவும், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியம் மேம்படவும், உடல் உள்ளுறுப்புகள் பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளை, தாவரங்கள் மூலம் இயற்கை நமக்கு வாரி வழங்குகிறது. இந்த இயற்கை தரும் முறைகளை செவ்வனே பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வை வாழலாம். அவ்வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கடுக்காய்.

கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள் கொட்டை காணப்படும்.

கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

சிறப்புத் தன்மைகள் :

கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மையுடையதாகும். வடமொழியில் ‘மருத்துவரின் காதலி’ எனப்படுகிறது. மருத்துவத்தில் மட்டுமின்றி பொருளாதா£ரம், தொழிலியல் துறைகளில் வெகுவாக பயன்படுகிறது. ‘திரிபலா’ என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டு மருந்தாகும். இதில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்க்கப்படுகின்றன. கடுக்காய் என்பது ஒரு கடினமான மருந்து என்று நாம் கருதுகிறோம். ஆனால் கடுக்காயை நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக வாங்கலாம். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

பொருளாதாரப் பயன்கள்:

கடுக்காய் மரத்தழைகளை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.

மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.

பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும் டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.

தோல் பதனிட டானின் பயன்படுகிறது.

துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.

டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக் காகிதம் செய்யவும், ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.

முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.

கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.

குணங்கள் :

வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள் :

கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.

_ சா. அனந்தகுமார்.
nantri-kumutham health

உடலில் Vitamin B1 குறைந்தால்...

‘‘என் மகளுக்கு வாயிலே அடிக்கடி புண் வருது. மணத்தக்காளி சாப்பிடு நல்லதுன்னு சொன்னால் கேட்டால்தானே? அவளுக்கு இங்கிலீஷ் மருந்துகளிலேதான் நம்பிக்கை.’’

மருந்துக்கடைக்காரரிடம் ராஜாராமன் பேசிக்கொண்டே போனார். எப்போதும் அவர் அப்படித்தான். வந்தோமா, மருந்தைக் கேட்டுவாங்கிக் கொண்டு கிளம்பினோமா என்று கிடையாது. என்றாலும், இரண்டு காரணங்களுக்காக மருந்துக்கடைக்காரர் ராஜாராமனைப் பொறுத்துக்கொள்வார். ஒன்று, அவர் பல வருடங்களாக அந்தக் கடையின் வாடிக்கையாளர். இரண்டு, அவருக்கு மருந்துகளைப் பற்றிய ஞானம் நிறைய உண்டு.

‘‘குரோசின் கொடு, அல்லது மெட்டசின் கொடு’’ என்று மருந்தினுடைய பிராண்டின் பெயரைக்கூற மாட்டார். ‘‘பாரசிட்டமால் மாத்திரை நாலு வேணும்’’ என்று அந்த மாத்திரைகளின் அடிப்படையான பொருளைக் குறிப்பிட்டுத்தான் கேட்பார்.

‘‘வாய்ப்புண்ணுக்கு ரிபோஃப்ளேவின் அடங்கின மாத்திரை நாலு கொடுப்பா’’ என்றார்.

அவருக்குத் தெரியும் ரிபோஃப்ளேவின் என்பது ஒரு வகைப் புரதம் என்பது. உதடு, வாயின் உட்புறம் போன்றவற்றில் உள்ள மெல்லிய தசைகள் வெடிக்காமல் வழுவழுப்புடன் இருக்க, இந்தச் சத்து தேவைப்படுகிறது. இதுகுறித்த பிற தகவல்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.


எந்தவிதமான இயற்கை உணவில் ரிபோஃப்ளேவின் அதிகம் காணப்படுகிறது?

கீரை வகைகள், வேர்க்கடலை ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். பயிர் வகைகளிலும் இந்தச் சத்து உண்டு.

பயிர் வகைகளை சமைக்கும்போதோ, நிலக்கடலையை வேகவைக்கும் போதோ ரிபோஃப்ளேவின் சத்து அழிந்து விடுமா?

சராசரி வெப்பத்தில் ரிபோஃப்ளேவின் அழிந்துவிடுவதில்லை. அதே சமயம் நிறைய நேரம் சூரிய வெளிச்சத்தில் படுகிற மாதிரி இந்த உணவுப் பொருள்களை வைத்திருந்தால், அவற்றில் உள்ள ரிபோஃப்ளேவின் சத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.

கருத்தரித்த பெண்களுக்கு அதிக அளவில் ரிபோஃப்ளேவின் தேவைப்படுமா?

அப்படி ஒன்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கவில்லை. என்றாலும், கருத்தரித்த பெண்களின் சிறுநீரில் உள்ள ரிபோஃப்ளேவின் அளவு, குறைவாகவே இருக்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். அதாவது அப்போது அவர்களது உடல் அதிக ரிபோஃப்ளேவின் புரதச் சத்தை ஈர்த்துக்கொள்கிறது என்று கூறலாம். இந்த வகையில் சற்றே அதிகமாக ரிபோஃப்ளேவின் கர்ப்பிணிப் பெண்களின் உணவில் இருக்க வேண்டும் என்று கூற இடம் உண்டு.

ரிபோஃப்ளேவின் என்பது ஒருவகை வைட்டமினா?

ஆம். Vitamin B யில் பல முக்கிய வகைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. B2 என்பதில் இரண்டு முக்கிய என்ஸைம்கள் உண்டு. அவற்றில் ஒன்று ரிபோஃப்ளேவின். மற்றொன்று நியாஸின்.

VitaminB பிரிவைச் சேர்ந்த மற்றவை குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே.

Vitamin B1 என்பது தியாமின் என்ற வேதியல் பொருளைக் குறிக்கிறது. மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் மூளை சரியாக வேலை செய்ய Vitamin B தேவை.

Vitamin B சத்தை எந்த வகை உணவுப்பொருள்களின் மூலம் பெறலாம்?

ராகி, சோளம், முட்டை, பன்றிக்கறி, முந்திரி போன்ற பருப்புகள் ஆகியவற்றில் Vitamin B1 இருக்கிறது.

உடலில் Vitamin B1 குறைவு ஏற்பட்டால் என்னவாகும்?

பெரிபெரி என்ற ஆரோக்கியக் குறைவு தோன்றும். தொடக்கத்தில் பசியின்மை, களைப்பு, தசைகளில் வலி ஆகியவை இருக்கும். கவனிக்காமல் விட்டால் கைகால்களில் தாங்கமுடியாத வலி, இதயத்தின் பணியில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படலாம்.

அதிகஅளவில் Vitamin B1 ஐ உட்கொண்டால் ஆபத்தா?

இல்லை. அதேபோல் ரிபோஃப்ளேவினை அதிகமாக உட்கொண்டாலும் உடலுக்குப் பாதகம் எதுவும் ஏற்படுவதில்லை.

பொதுவாகவே Vitamin B குழுவைச் சேர்ந்த பொருள்கள் தண்ணீரில் கரையக்கூடியவை. எனவே, சமைக்கும்போது நீரோடு சேர்ந்து இவையும் வெளியேறி விட வாய்ப்பு உண்டு. ஆகவே, Vitamin B உள்ள காய்கறிகளை சூப், சாலட் போன்ற வகை உணவுகளாக உட்கொள்ளுவது நல்லது.

ஆதர்ஷ்
Quelle-Kumutham

வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.

குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை.

சிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பதே வெங்காயம்தான்.

வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது?

வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும்.

வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி, அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.

உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.

பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.

பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.

உடல் பருமனைக் குறைக்க....

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அழகாக மாற உதவும்...

இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.

உஷ்ணக் கடுப்பு அகல

பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரண தலைவலிக்கு

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

விசக் கடிக்கு

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலுக்கு

பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் சக்தி பெருகும்

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.

ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறு வலி

பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.

பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை

பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை ஒழுக்கிற்கு, வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி 100 கிராம் அளவு சேகரித்து சாறு எடுத்து பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு கொடுக்க குணம் தெரியும்.

உடல் அயர்வும் வலியும் நீங்க

அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.

குடல் புழுக்கள் நீங்க

குழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.

பால் சுரப்புக்கு

குழந்தைப் பேறுக்குப் பிறகு சில தாய்மார்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் இருந்து விடுவதுண்டு

பசுவின் பாலில் இரண்டொரு வெள்ளைப் பூண்டு பற்களைப் போட்டு காய்ச்சி பூண்டை சாப்பிட்டு பாலை குடித்து விட வேண்டும்.

Quelle - Sinehithi

குதியில் வலி (Planter Fascitiis)

Dr.M.K..முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்


குதியில் வலி, குதிவாதமா?
குதிவாதம் என்றால் என்ன?


உங்கள் பாதத்தில் வலி ஏற்படுகிறது. அந்த வலி நீங்கள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து பாதத்தை நிலத்தில் வைக்கும் போது கடுமையாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும்போது வலி குறைந்து விடுகிறது. இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் பிளான்டர் பியடிஸ் (Planter Fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நோய்தான். எம்மவர்கள் இதனைப் பொதுவாகக் குதிவாதம் என்பார்கள். ஆனால் இது தவறான அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நோய். ஆனால் இது மூட்டுக்களில் ஏற்படும் நோயல்ல. எனவே உண்மையில் வாதம் அல்ல. பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளின் அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. மூட்டுகளில் அல்ல.

அத்துடன் பக்க வாதம் என்றும் பாரிச வாதம் என்று சொல்லப்படும் நோய்க்கும் இதற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என்பதும் குறிப்படத்தக்கது.

எனவே இது ஆபத்தான நோயல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். சில்லறைத் துன்பங்களைக் கொடுக்கும் நோய் மட்டுமே.

இந் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை முதலில் தெளிந்து கொள்ளுங்கள்.

இந்நோயின் முக்கிய அறிகுறி உங்கள் பாதத்தின் குதிப்பகுதியில் ஏற்படும் வலிதான். சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீங்கலாம், அல்லது சூடாக இருப்பதையும் நீங்கள் உணரக் கூடும். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். உங்கள் பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியால்தான் இந்நோய் ஏற்படுகிறது.

குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது முன்பே சொல்லியது போல முக்கியமாக அதிகாலையில் நீங்கள் படுக்கை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் நாட் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.

குதிவாதம் ஏற்படக் காரணம் என்ன?

குதிவாதம் ஏற்படக் காரணங்கள் பலவாகவோ அன்றி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய வெவ்வேறாகவோ இருக்கலாம். உங்கள் குதிப் பகுதியிலும் காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் காரணமாக இருக்கலாம், மாறாக பாதப்பகுதியின் தளர்ச்சியும் காரணமாகலாம், அல்லது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியைத் தவறாகச் செய்வதும் காரணமாகலாம் , அல்லது உங்கள் பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவாகவும் இருக்கலாம். உதாரணமாக மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகளைக் கூறலாம்.

பொருத்தமற்ற அதாவது அளவற்ற காலணியை நீங்கள் உபயோகிப்பதும் குதிவாதத்திற்குக் காரணமாகலாம். அல்லது உங்கள் தொழில் காரணமாவோ அல்லது பொழுது போக்குப் பழக்கம் காரணமாகவோ, நீங்கள் குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிக வேலை கொடுத்து ஊறு விளைவிப்பதாலும் இருக்கலாம்.

எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது?

உங்கள் வைத்தியர் உங்களுக்கு ஆலோசனை, பயிற்ச்சி முறைகள், மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றைச் சேர்த்தோ அளிக்கக் கூடும். அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை உங்கள் குதிவாதம் ஏற்படுவதற்கான காரணத்தை அகற்றுவதாக இருக்க வேண்டும். அத்துடன் அதன் வேதனையைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும் அத்துடன் சிகிச்சையானது உங்கள் பாதத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்கவும் வேண்டும்.

முதலாவதாக உங்கள் பாதணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள்ளங்காலுக்குரிய சவ்வுக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலைப்பளுவைக் கொடுக்காத, அதன் வேதனையைக் குறைப்பதற்கு ஏற்ற காலணிகளை நீங்கள் தேர்ந்து அணிய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு இசைந்து ஒத்தாசை வழங்குவதான அமைப்புடையதாக இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் பாதணியின் அளவு உங்களுக்கு மினவும் பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

குதிவாதநோய் ஏற்பட்டுள்ள விளையாட்டு வீரர்களும்,மற்றும் துடிதுடிப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களும் தமது பாதங்களுக்கு மேலதிக வேலை கொடுப்பதைக் குறைக்க வேண்டும். அதாவது பாய்தல், ஓடுதல், துள்ளல் போன்றவற்றைச் செய்யும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உங்கள் பாத வளைவுக்கு ஏற்ற விசேட பாதணிகளும் சிலவேளை தேவைப்படலாம்.

காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மஸாஜ் செய்தால் எழுந்து நடக்கும் போது வலி குறைவாக இருக்கும்.

அடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.

முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலிக்கு உதவும். மேலே காட்டிய படங்களில் உள்ளபடி இரண்டு விதமாக செய்யுங்கள். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள். முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரைத் தள்ளுங்கள். தள்ளுபோது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னிருக்கும் காலிலின் குதிப் பகுதியில் பாரம் தங்குமாறு செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி வைத்துச் செய்யுங்கள்.

இரண்டாவது படத்தில் காட்டிய அடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளுங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமாறு செய்யும். உண்மையில் இவை உங்கள் தசைகளைப் பலமுறச் செய்து அதனால் எதிர்காலத்தில் வலிகள் தொடர்ந்து வேதனை அளிப்பதைக் குறைக்க உதவும்.

பாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகளில் துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.

துவாயைச் சுருட்டல் பயிற்சி - ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.

இன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை, அல்லது சில நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள். உங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.

கால்விரல் தட்டல் (Toe Tab) இன்னுமொரு நல்ல பயிற்சியாகும். இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதி தரையில் திடமாக இருக்கும்படி வைத்தபடி கால் விரல்களை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.

இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஜம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.

குதியில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்க ஐஸ் மஸாஸ் சிலருக்கு உதவக் கூடும். ஒரு சிறிய பேப்பர் கோப்பையில் நீரை வைத்து குளிர்சாதனப் பெட்டி மூலம் ஐஸ் ஆக்குங்கள். கோப்பையிலிருந்து ஐஸ் வெளியே தெரியும் பகுதியை பாதத்தின் வலிக்கும் இடத்தின் மேல் வைத்து அழுத்துங்கள். மிதமான அழுத்தத்துடன் சுற்றுவட்டமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு அழுத்துங்கள். இதுவும் குதிவாதத்தின் வலியைத் தணிக்க உதவும்.

ஆழம் குறைந்த பேசினுக்குள் ஐஸ் கலந்த நீரினுள் பாதத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருப்பதையும் மேலை நாட்டு வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆயினும் எம்மவர்கள் குறைந்த சூடுள்ள நீரில் பாதத்தை வைத்திருப்பது கூடிய சுகத்தைக் கொடுப்பதாக உணர்கிறார்கள்.

வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.

சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.

உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையை வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானியுங்கள். மனந்தளராமல் தொடர்ந்து செய்யுங்கள் சுகம் கிடைக்கும்.

Dr.M.K..முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்


நன்றி - பதிவுகள்.கொம்

கோடையில் சாப்பிட வேண்டியவை

தர்பூசணி

இது தாகத்தைத் தணிக்கும். பசியினையும் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவுகிறது. உடலில் புத்துணர்ச்சியைக் கூட்டுவதோடு, மனதிற்கும் எழுச்சி தருகிற பழம் இந்த தர்ப்பூசணி.

ஆரஞ்சு

பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படும் ஆரஞ்சை ஆயுர்வேத சிகிச்சை முறை பெரிதும் கைக்கொள்கிறது. வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்துகிறது.

சளி பிடித்துள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கும் முன்பு ஒன்றிரண்டு ஆரஞ்சுப் பழங்களைத் சாப்பிட்டு விட்டுப் படுக்கலாம். காலையிலும் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரிதும் பயன் அடையலாம். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்ச்சலின்போது, நோய்களுக்கு அருமருந்து ஆரஞ்சு, உடலுக்குத் தெம்பு கூட்டும், செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்ப காலப் பெண்மணிகளுக்கு ஏற்படும் குமட்டலுக்கு சிறந்தது ஆரஞ்சு. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்கவேண்டும். செரிமானச் சக்தியைக் கூட்டி, செரிமான உறுப்புகளை வலுவூட்டி வயிற்றுப் பிரச்னையைத் தீர்க்கும்.

சாத்துக்குடி

குளிர்ச்சியான இனிப்பான சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதிலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது.

சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது. காய்ச்சலின் போது, வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.

வெள்ளரிக்காய்

வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்திற்கு உதவுவது. தன்வந்திரி நிகண்டு காரா கூறுகிறது இப்படி. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியையூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது.

வெள்ளரியில் ‘கலோரி’கள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது.

தொகுப்பு : மா. பிரபா
நன்றி - குமுதம்-Health

நியூரோடிக் அச்சம் (Neurotic)

நிர்மலாவுக்கு திடீரென்று உடம்பு வியர்க்கத் தொடங்கியது. இருக்க இருக்க உடல்நடுக்கம் கூடியது. இதயத்துடிப்பு என்றைக்கும் இல்லாத அளவிற்கு அதிகமானது. எங்கே மயக்கமடைந்து மூர்ச்சையாகி கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தார்.

நிர்மலா இயல்பாக இல்லை என்பதை அவரது கணவர் செல்வம் புரிந்து கொண்டார். ஆபீஸ§க்கு லீவு சொல்லிவிட்டு, மனைவியிடம் ஆறுதலாகப் பேசி மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டார்.

நிர்மலாவைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர், செல்வம் ‘‘உங்க மனைவியைத் தக்க சமயத்தில் அழைத்து வந்துட்டீங்க. இல்லைன்னா நிர்மலாவின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்’’ என்று சொல்லிவிட்டார்கள். செல்வம் ஆடிப்போய்விட்டார். இவ்வளவு சீரியஸான நிலையிலா நிர்மலா இருந்திருக்கிறாள். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சிகிச்சைக்குச் சம்மதித்தார்.

திருமணத்திற்கு முன்பு நிர்மலாவிற்கு இந்த மாதிரியெல்லாம் வந்ததில்லை. திருமணத்திற்குப்பின் ஏதோ ஒருவகை அச்சம் அவரை வாட்டத் தொடங்கிவிட்டது. வேறு பிரசினையாக இருந்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், தனக்கு எதைப் பார்த்தாலும் எந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் அச்சமாக இருக்கிறது என்று சொல்லத் தயங்கினார். அந்த அச்சம்தான் அவரை இன்று இவ்வளவு தூரத்திற்குக் கொண்டு வந்துவிட்டது.

அச்சம் தானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்பதற்கு ராகவி உதாரணம். அச்சம் காரணமாக வரும் பிரசினைகள் எப்படியிருக்கும் என்பதை அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.

நியூரோடிக் அச்சம் (Neurotic)

இதை நியூரோடிக் அச்சம் என்கிறார்கள். பார்த்தால் சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் அஞ்சி நடுங்குவார்கள்.

அஞ்ச வேண்டிய சூழ்நிலையாக இருக்காது. ஆபத்தில்லா இடமாக இருக்கும் என்றாலும் பயந்து பயந்து நடுங்குவார்கள்.

எதோ ஆபத்தான சமயத்தில் அச்சம் வருவது மனித இயல்பு. இயற்கையான நிகழ்வும்கூட. இது எல்லாருக்கும் பொருந்தும். எல்லார் வாழ்க்கையிலும் அப்படியரு அச்சம் நிகழ்ந்திருக்கும்.

ஆனால், சிலர் தினசரி வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அச்சப்படுவார்கள். அச்சப்படும் நோய் (Neurotic) உள்ளவர்களுக்கு இது மிகப் பெரிய விஷயம்தான்.

ராகவி பிறந்ததில் இருந்தே செல்லமாக, எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்தவள். துன்பம் என்றால் என்ன என்பது அறியாமலே இருந்து விட்டாள்.

திருமணத்திற்குப்பின் எதோ இனம் புரியாத ஒரு பயம் அவளைத் தொற்றிக் கொண்டது. எப்படி நாம் குடும்பம் நடத்தப் போகிறோம் என்ற தேவையற்ற பயம் அவளைத் தொற்றிக் கொண்டது.

ஒருமுறை கணவருடன் ஸ்கூட்டரில் வண்டலூர் ஜூ சென்றபோது, இடையில் ஒருவர் காரில் அடிபட்டுக் கிடந்ததைப் பார்த்துவிட்டார். அந்த சம்பவத்திற்குப் பின், இரண்டு நாள் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்துவிட்டார். காரணம் பயம். கணவர் வீடு திரும்பும் வரை மனம் அடித்துக் கொள்ளும். கணவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தும் பயப்படத் தொடங்கிவிட்டார்.

அச்சம் அவரை பலவீனப்படுத்தி, சிறுவர்களைப் போல சக்தியின்றி நடந்து கொள்ள வைத்து விட்டது.

அறிகுறிகள்:

நியூரோடிக் அச்சம் உள்ளவர்கள் எப்படிச் செயல்படுவார்கள்?

1. எதிர்த்துப் பேசமாட்டார். தன்னைத் தாக்குபவரைக்கூட எதிர்த்துத் தாக்கமாட்டார். இயற்கைக்கு விரோதமான முறையில் தமக்குச் சாதகமாகவே நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். தங்கள் உரிமையைக் கூட காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கமாட்டார்கள்.

2. அடிமைத்தனமாக நடந்து கொள்வார்கள். பொறுப்பு அடக்கப்பட்டு விடும். சுதந்திரமே இல்லாதவர் போல் நடந்து கொள்வார்கள். சுயேச்சையாக எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள்.

3. யாரைப் பற்றியும் யாரிடமும் புகார் செய்யமாட்டார்கள். அதைப் பற்றிய கருத்தும் தெரிவிக்கமாட்டார்கள். தவறே நடந்திருந்தால் கூட அதை தைரியமாக சுட்டிக்காட்டப் பயப்படுவார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டால்கூட சங்கடத்தில் நெளிவார்கள். எதிரான கருத்துத் தெரிவிக்கவே மாட்டார்கள்.

4. யாராவது அன்பாக நடந்து கொண்டால் கூட பயத்தின் காரணமாக நம்ப மாட்டார்கள். அதனால் பலரின் நட்பு கிடைக்காமல் போகும். குடும்ப உறுப்பினர்களிடையே கூட அந்நியோந்யம் இல்லாமல் போய் விடும்.

இதெல்லாம் நியூரோடிக் அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தைதான். இது எளிதில் இனம் காணக் கூடியது. அதனால் அதிகம் பயப்படத் தேவையில்லை. வெளியில் தெரிந்தவுடன் நிவர்த்தி செய்து விடக்கூடியதுதான். ஆனால், இந்நோய் உள்ளவர்கள் தனக்கு அச்சமாக இருக்கிறது என்றாவது சொல்லத் தைரியம் வேண்டும்.

பாதிப்புகள்:

இப்படிப்பட்டவர்களுக்குத்தான் பயம் பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதனால் கவலை அடைவார்கள். இதனால் உடலில் வேர்வை, நடுக்கம், இதயத் துடிப்பு ஏற்படும். சிறுகுடல்களில் பெரிய பாதிப்பை உண்டாக்கும். உணர்வில் கொதிப்பை உண்டாக்கி மூர்ச்சை உண்டாக்கும் இவருக்கு இதுவே தீவிரமாக இருந்தால் மரண பயமாகக் கூட ஏற்பட்டு விடும்.

அச்சத்தில் இருந்து விடுபட வழிகள்:

1. வாழும் முறையை மாற்ற வேண்டும். அது வாழும் இடமாக இருக்கலாம், சுற்றியுள்ள மனிதர்களாக இருக்கலாம். சீதோஷ்ண நிலையாக கூட இருக்கலாம். இதில் மாற்றங்கள் செய்யச் செய்ய மனமும் மாற்றத்திற்கு உட்பட்டு பாதுகாப்பான எண்ணத்தை உருவாக்கும்.

2. பயப்படவைக்கும் சூழ்நிலையை எதிர்த்துப் போராட வேண்டும். அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொன்றிற்கும் பயப்படத்தேவை இல்லை என்று நமக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்.

3. அச்சம் தரும் சந்தர்ப்பங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் ஆபத்தைத் தவிர்ப்பதும் அதிலிருந்து தப்புவதும் நம் கையில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை வரவேண்டும். தவிர்ப்பதும் தப்புவதும் எப்படி என்று தெரிந்து கொண்டாலே அச்சம் நம்மை நெருங்காது. தனிமையில் இருந்தால் பயமாக இருக்கிறது என்றால் அதைத் தவிர்ப்பதும் இதில் அடங்கும்.

4. கவலை கூடாது. எடுத்ததற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. பள்ளிக்குச் செல்லும் குழந்தை வீடு திரும்பும் வரை மனத்தை அச்சத்துடனேயே, சந்தேகத்துடனேயே வைத்திருக்கக் கூடாது.

5. எல்லாம் நன்மைக்கே என்ற மனப்பான்மையை வளர்க்க வேண்டும். எதையும் பாஸிட்டிவாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு உங்களுக்கு உதவுவதுதான் யோகா, தியானம், இசை போன்றவை.

6. அச்சம் வந்தால் பாடலாம். மனசுக்குள் நமக்குப் பிடித்த பாட்டைப் பாடிக் கொண்டே இருந்தால், அச்சம் தரும் சிந்தனை குறையும் என்கிறார்கள்.

7. உடலில் உள்ள ரசாயன மாற்றங்களால் கூட இந்த அச்ச நோய் வர வாய்ப்பு உண்டு. அதனால் முறையான உடற்பயிற்சி அவசியம் தேவை.

8. எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறுப்பினர்களிடமோ, தொண்டர்களிடமோ கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கருத்துக்களை அவர்கள் ஏற்கும் வகையில் வாதிடப் பழகிக்கொள்ள வேண்டும்.

அச்சத்தால் நமக்கு எதுவும், நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே பலர் பணிந்து போவார்கள். விட்டுக் கொடுத்து விடுவார்கள். எளிதில் அடிமைப்பட்டுப் போய்விடுவார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, இவர்களிடம் காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இதற்கு இடம் கொடுக்காமல் இருக்க, உங்களை நீங்களே தைரியப்படுத்திக் கொள்வதுதான்.

அதீத அச்சம் காரணமாக உடல் அளவில் பாதிப்பு ஏற்படும் போது, நீங்கள் மருத்துவரை நாடவேண்டும். அதற்கென்று பிரத்யேகமாக மருந்துகள் வந்துவிட்டன.

- இரா.மணிகண்டன் -
நன்றி - குமுதம் Health

வெந்நீரின் பயன்கள்

வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீருமென்று தன் அனுபவத்தை வைத்துச் சொல்கிறார் குமுதம் சினேகிதி வாசகி மகாலட்சுமி

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ‘‘அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...’’ என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு. உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்... வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ‘‘அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்’’ என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.

ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!

வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது... என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா...? குட் குட்!

நன்றி - குமுதம்-சினேகிதி

26 Februar 2006

பப்பாளியின் மருத்துவக் குணம்



17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி. மிகவும் இனிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களிலும் பப்பாளி வரத்து இருக்கும். பழுக்காத காய்கள் பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்தபின் விதைகள் மிளகு போன்று இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும்.

நல்ல மலமிளக்கியாகவும், பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள பப்பாளி சற்றே எண்ணெய்ப் பசையாக உள்ள பழமாகும். இதுவும் உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு அருமருந்து பப்பாளி.

பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸாகவும், மீதி ஃபிரக்டோஸ் (பழச் சர்க்கரை) ஆகவும் உள்ளது. பழங்களிலேயே வைட்டமின் ‘ஏ’ சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க வைட்டமின் ‘சி’ கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் ‘சி’யும் மிக அதிகமாக இருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசினும் உண்டு.

பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதிப் பொருட்கள் (என்சைம்) உள்ளது. இதற்கு ‘பப்பாயின்’ என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

பச்சைக்காயை வேண்டுமானால் சாறாக்கிக் குடிக்கலாம். பழுத்த பப்பாளியை அப்படியே உண்ணலாம். இதை சாறாக்கத் தேவையில்லை. அப்படியே சாறாக்கிப் பயன்படுத்த வேண்டுமானால் கொஞ்சம் பால் அல்லது நீர் கலந்து கொள்ளலாம். புத்துணர்ச்சியை ஊட்டக்கூடியது பப்பாளியின் சாறு.

மருத்துவப் பயன்கள்

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச்சோகைக்கு பப்பாளி நிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. மேலும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது. எனில், நோய்வாய்ப் படுவதற்கும் சாத்தியமில்லை. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும், ஆஸ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

தொகுப்பு : மா. பிரபா
nantri-Kumutham
padam-yarl.com

வயிற்றுவலி


வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள்.

அதில் வயிற்றுவலி என்பது வயிறு அல்லது உணவுக் குழலில் ஏற்படும் வலியைக் குறிக்கும். வயிற்றுவலி வந்தவுடன் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் உடனே டாக்டரிடம் ஓடமாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த மண்வாசனை மருத்துவத்தை செய்து பார்ப்பார்கள். சாதாரண வலி என்றால் இந்த மருத்துவத்திற்கே கட்டுப்பட்டு விடும். கிராமப்புறத்தில் வயிற்று வலிக்கு என்னென்ன மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் அவசர காலத்தில் உதவும்தானே.

அதற்கு முன் எத்தனை வகையான வயிற்றுவலி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்:

1. வயிற்றில் குடல்புண் இருந்தால் வயிறுவலிக்கும்.
2. உணவு செரிக்கவில்லை என்றால் வயிறுவலிக்கும்
3. காரம், புளி போன்றவை அதிகரித்தாலும் வயிறுவலிக்கும்.
4. அடிக்கடி தலைவலி வருகின்றவர்கள் அனாசின், சாரிடான் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் வயிறு வலிக்கும்.
5. கெட்டுப்போன உணவை உண்டதால் சிலருக்கு வலி ஏற்படும். இவற்றில் எது சரியான காரணம் என்பதைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டு பிடித்தவுடன் வயிற்றுப் புண் என்றால் புண்ணுக்குரிய மருந்து முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவம்

மருந்து_1
நற்சீரகம் _ 100கிராம், ஓமம் _ 100கிராம், இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு _ 100கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும். வயிற்று வலி பூரண குணமாகி விடும்.

மருந்து _ 2
அதிமதுரம் _ 50கிராம், இந்துப்பு _ 50கிராம், நவாச்சாரம் _ 50கிராம் மூன்றையும் பொடியாக்கி 3கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்.

மருந்து _ 3
முருங்கையிலைச்சாறு _ 50 கிராம், நற்சீரகம் _ 50 கிராம் இரண்டும் கலக்கும் வரையில் அரைத்துக் குடிக்கத் தீராத வயிற்று வலிகள் தீரும். சில நாட்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால் நாள்பட்ட வயற்றுவலி குணமாகும்.

மருந்து _ 4
அருகம்புல் _ 100 கிராம், முற்றிய வேப்பிலை _ 100 கிராம் எடுத்து நன்கு இடித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி சாறு எÊடுத்துப் பருகினால் வயிற்றுவலி நாட்பட்டதாக இருந்தாலும் 15_20 நாட்கள் குடித்து வந்தால் கண்டிப்பாகக் குணம் ஏற்படும்.

மருந்து _ 5
சுத்தமான களிமண்ணை மாவுபோல் பிசைந்து அடையைப் போல் தட்டி அடி வயிற்றின் மேல் கட்டி வைத்து சுமார் 3 மணி நேரம் கழித்து எடுத்துப் போட்டுவிடவேண்டும். வெயிலில் வேலை செய்து திரும்பியவர்கள் வயிற்று வலி நீர் இறங்கவில்லை என்று கூறினால் மல்லாந்Êது படுக்கவைத்து வயிறு முழுவதும் விளக்கெண்ணெய் பூசி வைத்தால் வயிற்றுவலி குறையும்.

அதிகமான கவலை, மனஉளச்சல், உணர்ச்சிவேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின் தாக்கத்தால் தான் பெரும்பாலும் வயிற்றில் புண்ணுண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகின்றது.

வயிற்றுவலியை நிரந்தரமாகப் போக்குவதற்கு முற்றிய அத்தியிலை _ 100 கி, வேப்பிலை _ 100 கி, கீழாநெல்லி இலை _ 100 கி, குப்பைமேனி இலை _ 100 கி, ஆகியவற்றைச் சேகரித்து, நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளையும், (உணவிற்கு முன்னால்) 5 கிராம் தூளை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறி பூரண குணம் பெறலாம்.

தொகுப்பு: மா. பிரபா
nantri - Kumuthamhealth

ஒற்றைத் தலைவலி (Migraine)


உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.

அறிகுறிகள்:

மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.

படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

வகைகள்

ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைகளில் அறியப்படுவதாக உள்ளது.

1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)

தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

பொதுவான மைக்ரேன்: (Common migraine)

மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?

ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்_மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75% வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50% வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.

விடுதலைபெற நம்பிக்கையான வழிகள்:

அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல்

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்து வர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதுகுவலிக்கு குட்பை சொல்ல...


இந்தியாவில் எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல் போல முதுகுவலியும் இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருபது வயதிலிருந்து முப்பத்தைந்து வயது வரை உள்ளவர்கள்தான். அதுவும் குறிப்பாக பெண்கள்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

இதனால் இவர்களின் ஆபீஸ் வேலை கெடுவதுடன், மனதளவிலும் பல பாதிப்புகளை அடைகிறார்கள். மனச்சோர்வு, ஒருவித அச்சம் இவர்களைத் தொற்றிக்கொள்கிறது. சமயத்தில் வாழ்க்கையே வெறுத்து விட்டதாகக் கூட முதுகுவலி வந்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அலுவலகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியிருப்பதால், வேலை தொடர்பான பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளதும் மன உளைச்சலுக்கு ஒரு காரணமாகும்.

சிலருக்கு ஐம்பது, அறுபது வயதில் முதுகுவலி வரும். அது வயதாவதால் இருக்கலாம். அல்லது வேறு சில பிரச்னைகளாக இருக்கலாம். எதுவாகயிருந்தாலும் ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் போவது புத்திசாலித்தனம்.

முதுகுவலி ஏன் வருகிறது?

நம் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டது (டிஸ்க் ப் ரொலாப்ஸ்) என்றால்தான் முதுகுவலி வருகிறது.

நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.

சிலர் தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தால்தான் வலி உண்டாகிறது. இதன் அறிகுறியாக சிலருக்கு ஒரு காலிலோ இரு காலிலோ வலி இருக்கும். இடுப்பிலும் வலி தெரியும்.

இந்தத் தவறான நிலை பலநாள் தொடரும்போது ஏற்படும் அழுத்தத்தால் வட்டுக்களிடையே உள்ள பசை வெளியே வந்துவிடும். வெளிவந்த பசையானது மற்ற ஆதார உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியை உண்டாக்குகின்றது. இதைத்தான் டிஸ்க் நழுவிவிட்டது என்கிறார்கள்.

யார் யாருக்கு முதுகுவலி வரும்?

நீண்டதூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகநேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், ஒழுங்கற்ற படுக்கை, சிலவகை மெத்தையில் ((உ_ம்) ஃபோர்ம் மெத்தையில் படுப்பவர்கள்), சக்திக்கு மீறிய கனமான பொருட்களைத் தனியே தூக்குபவர்கள், எந்தப் பொருளை எப்படித் தூக்குவது என்ற விவரம் தெரியாதவர்கள், சரியாக, நேராக உட்காராமல் நீண்ட நேரத்திற்கு ஒரு பக்கமாகவே உட்காருபவர்கள், அல்லது நிற்பவர்கள், மெனோபாஸ் காலப்பெண்கள் ஆகியோருக்கு லேசு லேசாக ஆரம்பிக்கும் முதுகுவலி, கண்டு கொள்ளாமல் விட்டால் அதிக வலியாக மாறி விடக்கூடும். ஆண், பெண் இருவருக்கும் உடலின் எடை கூடுவதும் முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் எடை முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி உண்டாகிறது. இதற்கு நடைப்பயிற்சி அவசியம். நடப்பது நம் முதுகு, இடுப்புத் தசைகளை உறுதியாக்கும்.

பெண்களுக்கு முதுகுவலி அதிகம் வருவது எதனால்?

பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற்கும் சமயம்) காலத்தில் முதுகுவலி வருவதுண்டு. இந்தச் சமயத்தில் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறையும். இதனால்தான் வலி உண்டாகிறது. இதுதான் ஆஸ்டியோ ஃபொரோசிஸ் என்ற எலும்பு முறிவு நோய்க்கும் அறிகுறி. இதைத் தடுக்க பெண்கள் மெனோபாஸ் சமயத்திற்கு முன்பே மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பிஸிஜி (ஹார்மோன் ரீபிபோப்மெண்ட் தெரபி) சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள் :

1. படுக்கையில் கவனம் தேவை :

நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஃபோம் மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் ஃபோம் மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.

2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் :

நீண்டதூரம் இரு சக்கரவாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சேரோடு சேராக உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.

4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.

5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

6. சேரில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.

7. நாம் உட்காரும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும் இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால் சேரில் நன்றாக நிமிர்ந்து இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார வேண்டும். தேவைப்பட்டால் முதுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.

8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும். இரண்டாக வளைந்து குனிந்து பொருட்களை எடுக்கவோ தூக்கவோ கூடாது. கால்களை அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான பொருட்களைக் கைகயில் வைத்துக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக் கூடாது.

9. நடைப்பயிற்சி: உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளைப் பயன்படுத்தவே கூடாது.

முதுகுவலியை சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே கவனம் தேவை. இதனால் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. பயப்படவும் தேவையில்லை.

லேசான வலிகளைக் கவனிக்காமல் விடும்போதுதான் அவை அறுவை சிகிச்சை வரை பெரிதாகி விடுகின்றன. இப்போது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்வது எளிது. ஒரேநாளில் கூட எழுந்து நடக்க முடியும். இந்தநிலை நமக்கு ஏன்? முன்பே எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் நல்லதுதானே. மேலே சொன்ன வழிகள் முதுகுவலியை வரவிடாமல் செய்யும் எளியவழிகள்தான். முயன்று பாருங்கள்.