03 Oktober 2006

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்
இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,
எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

Quelle - Kumutham Health 15.9.2006