Posts mit dem Label Dr.M.K.முருகானந்தன் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label Dr.M.K.முருகானந்தன் werden angezeigt. Alle Posts anzeigen

28 April 2009

முழங்கை வலி

- Dr.எம்.கே.முருகானந்தன் -

"சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வரமுடியுதில்லை. முழங் கையிலை ஒரே வலி" என்றாள் வேதனை யுடன் ஒரு பெண்மணி.

"பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல் களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'." என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத் தைச் சுட்டிக் காட்டினாள்.

உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல் களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும்போது (உதாரணமாக கைலாகு கொடுப்பது, கதவின் கைபிடியைப் பிடித்து இழுப்பது) வலி ஏற்படுவ துண்டு. கைவலியைத் தவிர இவ்விடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ சேர்ந்திருப்பதில்லை என்பதை நோயுள்ளவர்கள் பலரும் அவதானித்திருப்பார்கள்.

முழங்கையின் வெளிப் புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையாக இருக்கும். ஆரம்பத்தில் பொறுக்கக் கூடியதாக இருக்கும் இவ்வலி காலகதி யில் (ஒரு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை)கடுமையாக மாறும். நோய் கடுமையான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியைக் கடுமையாக்கும்.

முழங்கையின் வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கி லத்தில் tennis elbow என்பார்கள். காரணம் டெனிஸ் விளையாடுபவர்களிடம் அதிகம் ஏற்படுவதால்தான். ஆனால் டெனிஸ் விளையாடுவது மட்டுமே இந் நோய் வருவதற்குக் காரணமல்ல.

முன்னங்கைகளை அதிகம் உபயோகிக்க வேண்டிய தொழில் செய்பவர்களி லும் இது ஏற்படும். வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுட்டியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங்களாகும்.

கொல்வ் விளையாடுவது போன்று முன்கையை ஒரே விதமாக உபயோகித்து தொடர்ந்து விளையாடுவதாலும், வேலை செய்வதாலும் முழங்கையில் இத்த கைய வலி ஏற்படுவதுண்டு.

உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசைநாண்(Tendon) உட்காயம் ஏற்படு வதாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இந்த தசைநாண்தான் உங்கள் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகி யவை சரியான முறையில் இயங்கு வதற்கு காரணமாயுள்ளன.

வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடவும் கூடும் என்பது எப்பொழுதாவது ஏற்படக் கூடிய ஆபத்தாகும்.

அவரது மணிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு யாவற்றையும் நன்கு பரிசோ தித்துப் பார்த்த போது அவருக்கு வேறு நோய்கள் அதாவது மூட்டு வாதமோ அல்லது நரப்புகளில் பாதிப்புக்களோ இல்லை என்பது தெளிவாகியது. இது டெனிஸ் எல்போ என்பதுதான் என்பது நிச்சயமாயிற்று. 'படம் எடுக்க வேண் டுமா' என்று அவள் கேட்டாள். எக்ஸ் ரே எடுக்க வேண்டியது அவசியமில்லை என்று விளக்கினேன்.

பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே காலகதியில் குணமாகி விடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டி (Elbow Brace) ஆகியவையும் உதவக் கூடும்.

உங்கள் விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் உங்கள் வலியைத் தணிக்க நிச்சயம் உதவும்.

விரல்களை விரிக்கும் பயிற்சி

மிகவும் சுலபமான ஒரு பயிற்சியானது ரப்பர் பான்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற்சியாகும். ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல்கழளச் சுற்றி அணியுங்கள். இப்பொழுது உங்கள் கை கோலியது போல தோற்றமளிக்கிறது அல்லவா? இனி விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரியுங்கள்.

இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் பத்துத் தடவைகள் செய்யுங்கள். மூன்றாவது தடவையும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை இரு தடவைகள் செய்ய வேண்டும்.

இறுகப் பிடிக்கும் பயிற்சி

இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி செய்யுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள். தொடர்ந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். காலை மாலையாக தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.

மணிக்கட்டை கீழ்நோக்கி இழுக்கும் பயிற்சி

உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்குவது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக்கட்டருகில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங்கள். 15 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பி;டித்த பின் தளர்த்துங்கள். மூன்று தடவை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

மணிக்கட்டுப் பயிற்சி

உங்களது உள்ளங்கை மேலே பார்க்குமாறு ஒரு முன்னங்கையை மேசை மீது வையுங்கள். பயிற்சி பாண்ட் ஒன்றை கைகளால் பற்றிக் கொண்டு மறுகையால் பாண்டடைப் பற்றிய கையின் மணிக்கட்டுப் பகுதியை உங்கள் உடலை நோக்கி இழுங்கள். பின் கையை மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

முழங்கை பயிற்சி

படத்தில் காட்டியபடி ஒரு காலுக்கு முன் மற்றக் காலை வையுங்கள். பயிற்சி பாண்ட்டின் ஒரு முனையை பின்னுள்ள காலுக்குக் கீழே வையுங்கள். மறு முனையைக் உள்ளங்கை மேலே பார்க்குமாறு கையால் பற்றி இழுங்கள். படத்தில் உள்ளபடி உள்ளங்கை தோள்மூட்டு வரை உயருமாறு இழுங்கள். மெதுவாக கையைப் பழைய நிலைக்கு செல்லவிடுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பத்து தடவை வீதம் தினமும் மூன்று தடவைகள் செய்யுங்கள்.

முன்கையை முறுக்கும் பயிற்சி

படத்தில் காட்டியவாறு உங்கள் முன்னங்கையை மேசையில்
உள்ளகை கீழே பாரக்குமாறு வைத்தபடி ஒரு சுட்டியலைப் பிடியுங்கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெதுவாகச் சுற்றுங்கள். வலி தோன்றும் வரை மட்டும் சுற்றுங்கள். வலி தோன்றினால் நிறுத்துங்கள். ஓவ்வொரு தடவையும் பத்துத் தரங்களாக மூன்று தடவைகள் செய்யுங்கள். சுட்டியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுட்டியலின் தலைப்பக்கமாக கையை நெருக்கிப் பிடியுங்கள்.

ஊசி மருந்து

பயிற்சிகளைச் செய்து, வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்தபோதும் வலி தணியவில்லை எனில் உங்கள் வைத்தியர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக்கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் அழற்சியைத் தணித்து நோயைக் குணமாக்கும்.

ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது எனக் கை விட்டுவிடாதீர்கள்.

தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

படத்தில் முழுங்கையை நீட்டியபடி மணிக்கட்டை மடிக்கும் பயிற்சி காட்ப்பட்டுள்ளது.

90 முதல் 95 சதவிகிதமானவர்களுக்கு முன் கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகிவிடும். மேற் கூறிய வழிகளைப் குறைந்தது 6 மாதங்கள் கடைப்பிடித்தும் வலி தணியவில்லையெனில் மிகுதி 5 சதவிகிதமானவர்களுக்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இதன் போது நோயுற்ற தசைநார்த் துண்டை அகற்றி நல்லநிலையிலுள்ளதை எலும்பில் பதிய வைப்பார்கள்.

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -
ஆதாரம்:- American Academy of Family Physicians

Quelle - Hai Nalama

21 Oktober 2008

விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

“ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.

“ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12 குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.

விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு ஆதாரம் இதுதான்.

107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும் வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

அவர்கள் எவரது இரத்தத்திலும் B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும் ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.

இதன் அர்த்தம் என்ன?

நாம் வழமையாக எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தாவர உணவுகளில் விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும் முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.

அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால் கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.

விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும் மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை.

அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை.

எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- தினக்குரல் 02.10.2008

Quelle - ஹாய் நலமா?

11 Mai 2008

தீண்டத்தகாத உணவா சோறு?

- டாக்டர் எம்.கே. முருகானந்தன் -

அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள்.

உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல "சரி நான் சோத்தை கைவிடுகிறன்" என்றார். "சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.

காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே "இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்" என்றாள்.

ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.

ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில்
உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.

இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.

இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம்.
அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.

எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும்
அளவோடு உண்ணுங்கள்.

Quelle - Pathivukal

15 Februar 2008

இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவ முயற்சி!

- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் -

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார். முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது. மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது. அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள். பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்து விட்டதாக கூறுகிறார்கள்.

அநியாயச் சாவுதான் என்பதில் சந்தேகமில்லை.முதல் உதவி அறிவுள்ள ஒருவர் அருகிலிருந்து, வேண்டிய உதவியை உடனடியாகச் செய்தும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதுதான்.

உண்மையில் அவர் எப்பொழுது இறந்தார்?

அவரது நிலையை யோசித்துப் பாருங்கள்?

என்ன நடந்தது? அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன. குருதி வெளியேறவில்லை. ஆனால் இருதயம் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. எனவே மூளையானது உள்ள பிராண வாயுவைச் சேமிப்பதற்றாக இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். ஆயினும் மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விட்டார்கள். உண்மையில் அவன் இறந்து விட்டானா?

இறப்பு என்பது என்ன? கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று வழமையாகக் கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று 4-5 நிமிடங்களுக்குப் பின்னரே அவனது கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. உங்களது நண்பர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்கு பிராண வாயு கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் மீளச் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் இயங்க வைக்க முடியாததேயாகும்.

இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. Univesity of Pennsylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியமூட்டும் உண்மை வெளிப்பட்டது. மரணித்து ஒரு
மணித்தியாலயத்திற்கு மேற் சென்று விட்ட போதும் அந்த மனிதனது (அல்லது சடலமா?) கலங்கள் இறந்து விட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நத போது மேலும் சில மணிநேரத்திற்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருந்த போதும் வைத்தியர்களால் ஏன் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். 5 நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்தால், அக் கலங்களுக்கு பிற்பாடு பிராண வாயு கிடைத்த போதும் அவை இறப்பதைத் தடுக்க முடிவதில்லை. அது தான் உண்மை. ஆனால் ஏன்?

இதற்கு விடை கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்து விடும். இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும் முயற்சி ஆராய்ச்சியாக ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ஆராய்ச்சியானது கலங்களின் உள்ளே உள்ள சிறிய துணிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. மிட்டோகொன்ரியா (Mitochondria) எனும் அவைதான் கலங்களுக்குத் தேவையான சக்தியை, ஒட்சி ஏற்றம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இது இன்னுமொரு வித்தியாசமான கடமையையும் செய்கிறது. வழமைக்கு மாறான கலங்களை (உதா புற்றுநோய்க் கலங்கள்) நெறிப்படுத்தப்பட்ட முறையில் மரணிக்கச் செய்கின்றன. இது புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பு திட்டம் போலச் செயற்படுகிறது. எனவே 5 நிமிடங்களுக்குப் பின்னர் திடீரென ஒட்சிசன் கொடுக்கும் போது அக் கலங்களுக்கும் புற்றுநோய்க் கலங்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர முடியாமல் மரணிக்கச் செய்கின்றனவோ என எண்ணுகிறார்கள்.

ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் நாம் செய்வது என்ன? இருதயம் நின்று விட்ட ஒருவரை 10-15 நிமிடங்களுக்கு பின்னர் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க மருந்துகள் கொடுப்பதுடன் பிராண வாயுவையும் பம்ப் செய்கிறோம். இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்கிறோம். இது அவற்றின் மரணத்தில் முடிகிறது.

இதற்கு மாறாக மாற்று முறையில் சிகிச்சை செய்தபோது முடிவுகள் சாதகமாக இருந்தன. அதாவது இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தை செயற்கையாக heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இருதயத்தை துடிக்க வைத்தார்கள். 80 சத விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அத்துடன் குருதியின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், பிராண வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களை குறைக்க முடியும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஜசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் மரணித்தவருக்கும் சிகிச்சை செய்து 'உயிர்ப்பிக்க' முடியும். ஆராச்சிகள் தொடர்கின்றன. அது நாளாந்த செயற்பாட்டிற்கு வந்து, அதுவும் எங்கள் நாட்டிற்கு வந்து சேரும் வரை மாரடைப்பு வராதிருக்க பிரார்திப்போமாக.

kathirmuruga@hotmail.com
Quelle - Pathivukal

27 Februar 2006

குதியில் வலி (Planter Fascitiis)

Dr.M.K..முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்


குதியில் வலி, குதிவாதமா?
குதிவாதம் என்றால் என்ன?


உங்கள் பாதத்தில் வலி ஏற்படுகிறது. அந்த வலி நீங்கள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து பாதத்தை நிலத்தில் வைக்கும் போது கடுமையாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும்போது வலி குறைந்து விடுகிறது. இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் பிளான்டர் பியடிஸ் (Planter Fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நோய்தான். எம்மவர்கள் இதனைப் பொதுவாகக் குதிவாதம் என்பார்கள். ஆனால் இது தவறான அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நோய். ஆனால் இது மூட்டுக்களில் ஏற்படும் நோயல்ல. எனவே உண்மையில் வாதம் அல்ல. பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளின் அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. மூட்டுகளில் அல்ல.

அத்துடன் பக்க வாதம் என்றும் பாரிச வாதம் என்று சொல்லப்படும் நோய்க்கும் இதற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என்பதும் குறிப்படத்தக்கது.

எனவே இது ஆபத்தான நோயல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். சில்லறைத் துன்பங்களைக் கொடுக்கும் நோய் மட்டுமே.

இந் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை முதலில் தெளிந்து கொள்ளுங்கள்.

இந்நோயின் முக்கிய அறிகுறி உங்கள் பாதத்தின் குதிப்பகுதியில் ஏற்படும் வலிதான். சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீங்கலாம், அல்லது சூடாக இருப்பதையும் நீங்கள் உணரக் கூடும். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். உங்கள் பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியால்தான் இந்நோய் ஏற்படுகிறது.

குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது முன்பே சொல்லியது போல முக்கியமாக அதிகாலையில் நீங்கள் படுக்கை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் நாட் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.

குதிவாதம் ஏற்படக் காரணம் என்ன?

குதிவாதம் ஏற்படக் காரணங்கள் பலவாகவோ அன்றி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய வெவ்வேறாகவோ இருக்கலாம். உங்கள் குதிப் பகுதியிலும் காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் காரணமாக இருக்கலாம், மாறாக பாதப்பகுதியின் தளர்ச்சியும் காரணமாகலாம், அல்லது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியைத் தவறாகச் செய்வதும் காரணமாகலாம் , அல்லது உங்கள் பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவாகவும் இருக்கலாம். உதாரணமாக மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகளைக் கூறலாம்.

பொருத்தமற்ற அதாவது அளவற்ற காலணியை நீங்கள் உபயோகிப்பதும் குதிவாதத்திற்குக் காரணமாகலாம். அல்லது உங்கள் தொழில் காரணமாவோ அல்லது பொழுது போக்குப் பழக்கம் காரணமாகவோ, நீங்கள் குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிக வேலை கொடுத்து ஊறு விளைவிப்பதாலும் இருக்கலாம்.

எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது?

உங்கள் வைத்தியர் உங்களுக்கு ஆலோசனை, பயிற்ச்சி முறைகள், மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றைச் சேர்த்தோ அளிக்கக் கூடும். அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை உங்கள் குதிவாதம் ஏற்படுவதற்கான காரணத்தை அகற்றுவதாக இருக்க வேண்டும். அத்துடன் அதன் வேதனையைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும் அத்துடன் சிகிச்சையானது உங்கள் பாதத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்கவும் வேண்டும்.

முதலாவதாக உங்கள் பாதணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள்ளங்காலுக்குரிய சவ்வுக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலைப்பளுவைக் கொடுக்காத, அதன் வேதனையைக் குறைப்பதற்கு ஏற்ற காலணிகளை நீங்கள் தேர்ந்து அணிய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு இசைந்து ஒத்தாசை வழங்குவதான அமைப்புடையதாக இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் பாதணியின் அளவு உங்களுக்கு மினவும் பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

குதிவாதநோய் ஏற்பட்டுள்ள விளையாட்டு வீரர்களும்,மற்றும் துடிதுடிப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களும் தமது பாதங்களுக்கு மேலதிக வேலை கொடுப்பதைக் குறைக்க வேண்டும். அதாவது பாய்தல், ஓடுதல், துள்ளல் போன்றவற்றைச் செய்யும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உங்கள் பாத வளைவுக்கு ஏற்ற விசேட பாதணிகளும் சிலவேளை தேவைப்படலாம்.

காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மஸாஜ் செய்தால் எழுந்து நடக்கும் போது வலி குறைவாக இருக்கும்.

அடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.

முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலிக்கு உதவும். மேலே காட்டிய படங்களில் உள்ளபடி இரண்டு விதமாக செய்யுங்கள். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள். முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரைத் தள்ளுங்கள். தள்ளுபோது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னிருக்கும் காலிலின் குதிப் பகுதியில் பாரம் தங்குமாறு செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி வைத்துச் செய்யுங்கள்.

இரண்டாவது படத்தில் காட்டிய அடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளுங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமாறு செய்யும். உண்மையில் இவை உங்கள் தசைகளைப் பலமுறச் செய்து அதனால் எதிர்காலத்தில் வலிகள் தொடர்ந்து வேதனை அளிப்பதைக் குறைக்க உதவும்.

பாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகளில் துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.

துவாயைச் சுருட்டல் பயிற்சி - ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.

இன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை, அல்லது சில நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள். உங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.

கால்விரல் தட்டல் (Toe Tab) இன்னுமொரு நல்ல பயிற்சியாகும். இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதி தரையில் திடமாக இருக்கும்படி வைத்தபடி கால் விரல்களை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.

இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஜம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.

குதியில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்க ஐஸ் மஸாஸ் சிலருக்கு உதவக் கூடும். ஒரு சிறிய பேப்பர் கோப்பையில் நீரை வைத்து குளிர்சாதனப் பெட்டி மூலம் ஐஸ் ஆக்குங்கள். கோப்பையிலிருந்து ஐஸ் வெளியே தெரியும் பகுதியை பாதத்தின் வலிக்கும் இடத்தின் மேல் வைத்து அழுத்துங்கள். மிதமான அழுத்தத்துடன் சுற்றுவட்டமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு அழுத்துங்கள். இதுவும் குதிவாதத்தின் வலியைத் தணிக்க உதவும்.

ஆழம் குறைந்த பேசினுக்குள் ஐஸ் கலந்த நீரினுள் பாதத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருப்பதையும் மேலை நாட்டு வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆயினும் எம்மவர்கள் குறைந்த சூடுள்ள நீரில் பாதத்தை வைத்திருப்பது கூடிய சுகத்தைக் கொடுப்பதாக உணர்கிறார்கள்.

வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.

சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.

உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையை வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானியுங்கள். மனந்தளராமல் தொடர்ந்து செய்யுங்கள் சுகம் கிடைக்கும்.

Dr.M.K..முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்


நன்றி - பதிவுகள்.கொம்