03 Oktober 2006

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்
இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,
எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

Quelle - Kumutham Health 15.9.2006

15 September 2006

உண்ணாநோன்பு மருத்துவம்

- பேராசிரியர் யூரி நிக்கோலயேவ்

உண்ணாநோன்பு மருத்துவம் மிகப் புராதனமானதோர் இந்தியமுறையாகும்.
இப்போது மீண்டும் அது ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்று ரூசிய நாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது என்று நான் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருந்த போது பல இந்திய மருத்துவர்கள் என்னிடம் கூறினர்.

உண்ணாநோன்பு மருத்துவம் பல நோய்களுக்கான மருத்துவமுறையாக நெடுங் காலத்திற்கு முன்னரே எகிப்து, இந்தியா, கிரோக்கதேசம், ஆகிய நாடுகளில் வழங்கிவந்தது. வரலாற்றிற்கு முற்பட்ட புராதன - மிகப் பழங்காலத்திலேயே மக்கள் இந்த முறையை கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. விலங்குகளின் உடல்நலம் கெட்டால், உடல்
நலம் சீரடையும் வரை, அவை தாமாகவே உணவு ஏற்பதை நிறுத்தி விடுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.

உண்ணாநோன்பு பற்றிய ரூசிய ஆய்வு:
இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி உண்ணாவிரத சிகிச்சை பழங் காலத்திலிருந்தே இருந்த வருகிறது. உடலிலுள்ள நச்சுப் பொருட்களை முதலில் அகற்றுவதற்கான ஒருவழி முறையேஉண்ணாநோன்பு! அதைத் தொடர்ந்து, பின்னர் நோயைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் கொடுக்கப் படுகின்றன. உண்ணாநோன்பு, யோகப் பயிற்சியிலும் ஒர் அம்சமாகும்.

18ம் நூற்றாண்டில் மொஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர்களான பிவெனியானொவ், ஐ ஸ்ராஸ்கி ஆகியோர் பல்வேறு வகையான நோய்களைத் தீர்ப்பதில் பட்டினி சிகிச்சையின் பயன்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெற்றி பெற்றார். வளர்-சிதை மாற்றக் கோளாறுகள் - குறிப்பாக கொழுப்புப் பொருள்களின் வளர்சிதை மாற்றம், பல்வேறு இரத்தவோட்ட மண்டல நோய்கள், நுரையீரல், ஆஸ்துமா, தோல் நோய்கள், ஆகியவற்றை குணப்படுத்துவதில் கட்டப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை அளிக்கும் பயன்கள் குறித்து சோவியத் மருத்துவரான, என். நார்பகோன் தமது ஆய்வுக்கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளார். முன்சிறுகுடல் வளைவு, இரப்பை ஆகியவற்றிலுள்ள புண்களை ஆற்றுவதில் அப்படிப்பட்ட உண்ணாவிரதச் சிகிச்சையின் வெற்றிகள் பற்றி ஏ.பாகுலேவ் என்பவர் ஆய்வுகள் நடத்தி வெற்றிகள் கண்டள்ளார்.

இருபது -முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோவியத் ரூசிய நாடுகளில்
உண்ணாநோன்பு மருத்துவம் பல்வேறு மருத்துவ மையங்களிலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தோல் தொடர்பான நோய்களுக்கு முக்கியமாக இம்முறை பின்பற்றப் படுகிறது.

மனப்பிளவு நோய்க்கு உண்ணா நோன்பு
சிலவகை மனக்கோளாறுகளுக்கு குறிப்பாக ஆரம்ப நிலையிலுள்ள மனப்பிளவு நோய்க்கு உண்ணாவிரத சிகிச்சைமுறையைப் பின்பற்றலாம் என்பதை ர~;ய மருத்தவர்கள் கண்டறிந்துள்ளனர். உடலில் எந்தவித நோயும் இல்லாதிருக்கும் போது கூடத் தாங்கள் நோயுற்றிருப்பதாக அச்ச உணர்வினால் துன்புறும் பல நோயாளிகளுக்கும் பல்வேறு பீதியுணர்வினால் தனிமைப்பீதி கூட்ட நெரிசலால் எற்படும் பீதி, இருட்டு, தொற்றுநோய், கூர்மையான பொருள்களைப் பற்றிய பீதி, ஆகியவற்றினால் அவதிப் படுவோருக்கும் இம்மருத்துவமுறை சிறந்த பலன்களை அளித்துள்ளது.

எங்கள் மருத்துவக்கூடத்தில் மட்டுமே நாங்கள் இதுவரை ஏழாயிரம் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு இம்முறையைக் கடைப் பிடித்திருக்கிறோம். குணப்படுத்துவது கடினம் என்று கருதப்பட்டு வந்த சில நோய்களைக் குணப்படுத்துவதிலும் இந்த முறை சிறந்த வெற்றிகளைத் தந்துள்ளது. எனினும் சீரான மருத்துவ மேற்பார்வையிலேயே இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வகை மருத்துவம் அளிக்கப் படும் நோயாளிகள் மருத்துவ மையத்தில் தனிக் கூடங்களில் வைக்கப் படுகின்றனர். நோயாளிகள் அவர்களது உறவினர்கள் ஆகியோரது ஒப்புதலின் பேரிலேயே இம்முறை கடைப்பிடிக்கப் படுகின்றது.

முதலில் நோயாளிகள் எல்லாவகையான ஆய்வுகளுக்கும் உட்படுகின்றனர். உண்ணாநோன்பு மருத்துவம் மேற்கொள்வதால் நோயாளிகள் எவ்வகையான பாதிப்பும் எற்படப் போவதில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இம் மருத்துவமுறை தொடங்கப் படுகிறது.

ஒவ்வொரு நோயாளியும் எத்தனை நாட்கள் உண்ணாநோன்பு இருக்க வேண்டும் என்பது அவரவரது நோய் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யப் படுகிறது. அந்தக் காலகட்டம் இருபது முதல் நாற்பது நாட்கள் வரை நீடிக்கலாம் உண்ணாநோன்பை நோயாளிகள் பின்பற்றும் போது அவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கப்படுவதில்லை.

மருத்துவ முறை
உணவு கிடைக்காமல் கட்டாயத்தின் பேரில் பட்டினி கிடக்கும் போது ஒரு மனிதனுக்கு சாவு தொடரலாம். அதற்கு மாறாக பட்டினி நிலை இங்கு ஒரு மனிதனது நோயைத் தீர்க்கப் பயன்படுத்தப் படுகிறது.
ஏனெனில் இம் மருத்துவ முறை தொடங்கும் போது ஒரு மனிதனின் குடல் மண்டலம் அனைத்தும் முதலில் கழுவப்பட்டு உடலிலுள்ள எல்லா நச்சுப் பொருட்களும் அகற்றப்படுகின்றன. நோயாளிகளுக்கு குடிப்பதற்கு நிறைய நீரும் காலை வேளையில் நீர் மருத்தவமும் பொதுவான மசாஜ்மருத்துவமும் அளிக்கப் படுகிறது. அவர்கள் பெரும்பாலான நேரத்தை வெட்ட வெளியிலேயே கழிக்கின்றனர்.

பொதுவாக முதல் 3-5 நாட்களில் கட்டுப்படுத்தப் பட்ட தானியங்கு அமைப்புகள் தளர்ந்து பசியுணர்வு மறைந்துவிடுகிறது. உணவின் மணமோ அதைப் பார்ப்பதோ அவர்களைப் பாதிப்பதில்லை. எனினும் உணவு குறித்த இனிய நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றன அதிலும் நோயாளி அத்தகைய நினைவுகளிலிருந்து விடுபடாதிருந்தால் அவை மேன்மேலும் அவனைப் பாதிக்கவே செய்யும். மருத்துவரும் உளவியல் சிகிச்சையாளரும் இந்தக் கட்டத்தில் நோயாளிக்கு உதவுகின்றனர்.

ஆறாவது அல்லது ஏழாவது நாளில் தான் மிக்க கடுமையான அனுபவம் ஏற்படும். அப்பொழுதுதான் உடல் தன்னுள்ளேயுள்ள அற்றல் சேமிப்புகளையே உணவாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றது. இந்த நெருக்கடியான கட்டமும் குறுகிய கால அளவுக்கே நீடிக்கும். அதன் பின்னர் நோயாளிக்கு அவ்வளவு சிரமம் இருக்காது. அவனது மன உணர்வும் பலமும் அதிகரிக்கும். அவனிடமிருந்த முதன்மை நோய் குறையத் தொடங்குகிறது. உடலின் ஆற்றல் சேமிப்பு அனைத்தும் தீரும்வரை இந்நிலை நீடிக்கும்.
உடல் புனரமைக்கப் படுகிறது.

முப்பது அல்லது முப்பத்தைந்து நாட்களில் ஒருவர் இந்த நிலையை அடைகின்றார். இதற்குள்ளாக அந்த நோயாளியின் நாக்கு தூய்மையடைந்து தோலும் ஒருவித இளஞ் சிவப்பு நிறத்தை அடைகிறது. வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கி அவனுக்கு கோரப் பசி உணர்வு மேலிடுகின்றது. இந்தக் கட்டத்தில்தான் அடுத்த மிக முக்கியமான புனரமைப்பு நிகழ்ச்சி தொடங்கப் படுகின்றது.

முதலில் நோயாளிக்கு நீர்த்த பழச்சாறு கொடுக்கப் படுகிறது. பின்னர் படிப்படியாக நீர் சேர்க்காத பழச்சாறும் அதன் பின்னர் கஞ்சி வேகவைத்த காய் கறி சூப் போன்றவை மெல்ல மெல்லக் கொடுக்கப்படுகின்றது.

சாப்பிடத் தொடங்கி முப்பது அல்லது நாற்பதாவது நாளில்தான் அவனுக்கு வழக்கமான முழு உணவு கொடுக்கப் படுகின்றது.

உண்ணாநோன்பு காலத்தில் ஒரு நோயாளி மொத்தத்தில் சராசரி பதினைந்து முதல் இருபது சதவிகித எடையை இழக்கின்றார். ஆனால் மிகவும் பருமனானவர்கள் எடைக் குறைப்பிற்காகவே இந்தச் சிகிச்சை முறையைக் கடைப்படித்தால் இழப்பு அதிகமாக இருக்கும்.

முடிவுரை
இந்த முறையில் ஜந்து உயிரியல் அம்சங்கள் உள்ளன. முதலாவது நரம்பு மண்டலத்திற்கும் மூளைக்கும் தற்காப்பு அடங்கல் என்ற நிலைக்கு முழு ஓய்வு கிடைக்கின்றது. இரண்டாவது உடலிலிருந்து நச்சுப்பொருள் நீங்க உடல் தூய்மை செய்யப்படுகின்றது. மூன்றாவது ஒருவிதக் கூர்மையான உள் அடங்கல் ஏற்படுவதானது பின்னர் ஏற்படும் புனரமைவுக்குத் தூண்டுதலாக ஆகின்றது. நான்கவதாக திசுக்கள் தீவிரமாகத் தாமே புதுப்பிக்கப் படுகின்றன. ஜந்தாவதாக உடலின் எல்லா உறுப்பு மண்டலங்களும் குறிப்பாக நாளமில்லாச் சுரப்பு மண்டலம் ஒரு விதத் தகைவு நிலைக்கு உட்படுத்தப் படுகின்றது. பிற எல்லா உறுப்புகளையும் போன்றே உண்ணாநோன்பு சிகிச்சையின் போது மூளையும் அதிலுள்ள நச்சுப் பொருள்களை இழந்து புத்துயிர் பெறுகின்றது. மேலும் அதற்கு கணிசமான அளவு ஓய்வும்
தரப்படுகின்றது. மூளை ஆற்றலின் பெருமளவைப் பயன்படுத்தக் கூடியது
செரிமான மண்டலமேயாதலால் உணவின்றி இருக்கும்போது அது நல்ல ஓய்வு பெறுவது இயல்பே. இதுதான் உளவியல் கோளாறுகள் சீரடைவதன் அடிப்படை இரத்தநாள இறுக்க நோயாளிகள் நல்ல நினைவாற்றலைப் பெறுவதுடனே உணர்ச்சிப் பாதிப்புகளினின்றும் விடுபடுகின்றனர்.

- பேராசிரியர் யூரி நிக்கோலயேவ்
நன்றி: நல்வழி

Quelle - Vadalee -Sep-2006

16 Juli 2006

அதிமதுரத்தின் சக்தி

ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

Quelle - Kumutham health-july2006

04 Juli 2006

தூக்கம் அவசியம்

கண்களுக்குக் கீழே கரு வளையமா?

எப்போதும் உங்கள் முகம் பொலிவே இன்றி டல்லடிக்கிறதா?

நிறைய சாப்பிட்டும், மேக்கப் போட்டும் கூட உங்கள் முகம் சோர்வாகவே இருக்கிறதா?

இப்படி உங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பைசா செலவில்லாமல் ஒரு தீர்வு உண்டு என்றால், ஏற்றுக் கொள்வீர்கள்தானே?

தூக்கம் தான் அந்தத் தீர்வு. ராத்திரியானால் எல்லாரும்தான் தூங்குகிறோம். அப்படியானால் எல்லாருக்கும் அழகான சருமமும், தோற்றமும் இருக்க வேண்டுமே எனக் கேட்கிறீர்களா?

அதான் இல்லை. எப்படித் தூங்குகிறோம், எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் எனப் பல விஷயங்களைப் பொறுத்தது அது.

தூக்கத்தில் நடக்கிற விந்தைகள் பற்றி நமக்கெல்லாம் அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அதாவது தூங்கும்போது நம் உடலில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹார்மோன், சரும ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியத் தேவைகளான கொலாஜன் மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும், சரும செல்கள் புதுப்பிக்கப் படவும் கூட தூக்கம் அவசியம்.

தூக்கம் சரியாக இல்லாதவர்களுக்கு சருமப் பிரச்சினைகள் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள்.

உதாரணத்துக்கு பருக்கள், சரும வறட்சி மாதிரியான பிரச்சினைகள் அதிகம் வருகின்றனவாம்.

நாள் முழுக்க உழைத்த உடலுக்கு சில மணி நேரக் கட்டாய ஓய்வு அவசியம். ஓய்வைக் கொடுக்காமல், அதற்கு எதிராகப் போராடும்போது, அது உடல்நலத்தையும் பாதித்து, அழகையும் பாதிக்கிறது. உதாரணத்துக்கு ஓய்வுக்கு எதிராகப் போராடும்போது, இரத்த ஓட்டமானது உடலின் பெரிய பகுதிகளுக்குத் திருப்பப் படுகிறது. தூக்கமில்லாததால் முகம் வெளிறிப் போவதும், கண்களுக்கடியில் கருவளையம் வருவதும் கூட இதனால்தான்.

எது நல்ல தூக்கம்?

எது நல்ல தூக்கம், எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. சிலருக்கு ஆறு மணி நேரம் தூங்கும் பழக்கமிருக்கும். சிலர் எட்டு மணி நேரம் தூங்குவார்கள். சிலருக்கு பத்து மணி நேரம் வரை கூடத் தூக்கம் கலையாது. அது அவரவர் வசதியையும், வேலை நேரம் மற்றும் பிற விஷயங்களைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால், பகல் வேளையில் தூக்க உணர்வு உண்டானால், அந்த நபருக்கு இரவில் போதிய அளவு தூக்கம் இல்லை என்று அர்த்தம்.

நல்ல தூக்கத்துக்கு என்ன வழி?

படுத்தவுடன் தூங்கிப் போவது உண்மையிலேயே ஒரு வரம் மாதிரி. அது இயல்பாக அப்படியே பழக்கப் படுத்தப்படவேண்டும். தூக்கம் வராமல் தவித்து, அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்வது என்பது மிக மோசமான பழக்கம்.

நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாதித் தூக்கத்தில் திடீரென விழித்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். உடனே மறுபடி தூங்க ஆரம்பித்து விடுங்கள். மறுநாள் காலையில் வழக்கம் போல தானாக விழிப்பு வரும். குறிப்பிட்ட சில மணி நேரம் நன்றாகத் தூங்குவது, அந்த நாள் முழுவதற்குமான புத்துணர்வையும், சுறுசுறுப்பையும் தரும்.

நீங்கள் தூங்கப் போகிற நேரத்தையும், விழிக்கிற நேரத்தையும் முறைப் படுத்திக் கொள்ளுங்கள். தினம் ஒரே நேரத்தில் தூங்குவதையும், விழித்துக் கொள்வதையும் வழக்கப் படுத்த்திக் கொள்ளுங்கள்.

பகல் தூக்கம் வேண்டவே வேண்டாம். ரொம்பவும் அசதியாக உணர்கிறீர்களா? கண்களை மூடியபடி சிறிது நேரம் தியானம் செய்யலாம். குட்டித் தூக்கம் போட்டதற்கு இணையான புத்துணர்வைத் தரும் டெக்னிக் இது.

தூக்கம் வரவில்லையே என்கிற கவலையை விடுங்கள். டென்ஷன், கோபம், கவலை இல்லாத மனது நல்ல தூக்கத்துக்கு அடிப்படை. உடல்நலத்தில் ஏதேனும் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் எல்லாருக்கும் போதிய அளவு தூக்கம் நிச்சயம் வரும்.

உடற்பயிற்சிக்கும், தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தினசரி சில மணி நேரம் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சினையே வராது. குறிப்பாக நடைப்பயிற்சி.

மனச்சோர்வுக்குக் காரணமான ஹார்மோன்கள்தான் ஒருவரைத் தூக்கமில்லாமல் புரண்டு, புரண்டு தவிக்க வைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், இது கட்டுப்படுத்தப் படுவதால், நல்ல தூக்கம் நிச்சயம். மாலை நேரத்தில் ரொம்பவும் வேகமாக, வியர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

நீங்கள் படுக்கும் அறை ரம்மியமாக, போதிய அளவு காற்றோட்டதுடன் கூடியதாக இருக்க வேண்டியது முக்கியம்.

தூங்கச் செல்வதற்கு முன் காபி, கோலா மாதிரியான பானங்களைத் தவிருங்கள். மதியம் 2 மணி அளவில் குடித்த காபியே, இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரம் கொண்டதாம். கோலா, சாக்லேட், டீ போன்றவையும் தவிர்க்கப் படவேண்டும்.

நீங்கள் தூங்கும் திசையும் நல்ல தூக்கத்துடன் தொடர்பு கொண்டது. வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்தால் நல்ல உறக்கம் வருமாம்.

தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசையை ரசித்தபடி படுத்திருப்பது போன்றவையும் தூக்கம் வரவழைக்கும்.

அரோமாதெரபியில் தூக்கமின்மைக்கான பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. லேவண்டர் மாதிரியான குறிப்பிட்ட அரோமா ஆயில்களுக்கு தூக்கத்தைத் தூண்டும் குணம் உண்டு. நல்ல அரோமாஃபேஷியல் பல நாட்களாகத் தூக்கமின்றித் தவிப்போரது பிரச்சினையை ஒரே இரவில் மாற்றும். அரோமாஃபேஷியல் செய்து கொள்கிறபோது, அரோமாதெரபியில் கை தேர்ந்த நிபுணர்களிடம் செய்து கொள்வது நல்லது. அழுத்தப் புள்ளிகளைப் பார்த்துச் செய்ய வேண்டிய ஃபேஷியல் என்பதால் கவனம் தேவை.

- வசுந்தரா -
Quelle - kumtham health -15.6.2006

22 Mai 2006

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்!





















Quelle - kumutham sinekithi - may2006