21 Oktober 2008

விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

“ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.

“ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12 குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.

விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு ஆதாரம் இதுதான்.

107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும் வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

அவர்கள் எவரது இரத்தத்திலும் B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும் ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.

இதன் அர்த்தம் என்ன?

நாம் வழமையாக எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தாவர உணவுகளில் விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும் முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.

அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால் கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.

விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும் மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை.

அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை.

எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- தினக்குரல் 02.10.2008

Quelle - ஹாய் நலமா?

02 Juli 2008

மாதுளையின் மகத்துவம்


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

தகவல் - அனந்தன்
தமிழ்பிரவாகம்

11 Mai 2008

தீண்டத்தகாத உணவா சோறு?

- டாக்டர் எம்.கே. முருகானந்தன் -

அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள்.

உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல "சரி நான் சோத்தை கைவிடுகிறன்" என்றார். "சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.

காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே "இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்" என்றாள்.

ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.

ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில்
உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.

இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.

இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம்.
அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.

எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும்
அளவோடு உண்ணுங்கள்.

Quelle - Pathivukal

06 Mai 2008

பல் போனால் சொல் போகும்

டாக்டர் டி.பி.மகேந்திரன்

'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.

''குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.

பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''

தகவல்: M.RISHAN SHAREEF

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?

டாக்டர் ரவி ராமலிங்கம்
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், சென்னை


''செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.

செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''

தகவல்- M.RISHAN SHAREEF