18 März 2008

பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்!

- டாக்டர் ரவி ராமலிங்கம் -

பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.

சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம்.

மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.

டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.

அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

Quelle - ஜோண் நிரூபன்

வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாக

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாஞ்ஜுர்

Quelle - http://tamilmediblog.blogspot.com/2007/09/blog-post_4692.html

15 Februar 2008

இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவ முயற்சி!

- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் -

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார். முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது. மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது. அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள். பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்து விட்டதாக கூறுகிறார்கள்.

அநியாயச் சாவுதான் என்பதில் சந்தேகமில்லை.முதல் உதவி அறிவுள்ள ஒருவர் அருகிலிருந்து, வேண்டிய உதவியை உடனடியாகச் செய்தும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதுதான்.

உண்மையில் அவர் எப்பொழுது இறந்தார்?

அவரது நிலையை யோசித்துப் பாருங்கள்?

என்ன நடந்தது? அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன. குருதி வெளியேறவில்லை. ஆனால் இருதயம் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. எனவே மூளையானது உள்ள பிராண வாயுவைச் சேமிப்பதற்றாக இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். ஆயினும் மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விட்டார்கள். உண்மையில் அவன் இறந்து விட்டானா?

இறப்பு என்பது என்ன? கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று வழமையாகக் கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று 4-5 நிமிடங்களுக்குப் பின்னரே அவனது கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. உங்களது நண்பர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்கு பிராண வாயு கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் மீளச் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் இயங்க வைக்க முடியாததேயாகும்.

இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. Univesity of Pennsylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியமூட்டும் உண்மை வெளிப்பட்டது. மரணித்து ஒரு
மணித்தியாலயத்திற்கு மேற் சென்று விட்ட போதும் அந்த மனிதனது (அல்லது சடலமா?) கலங்கள் இறந்து விட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நத போது மேலும் சில மணிநேரத்திற்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருந்த போதும் வைத்தியர்களால் ஏன் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். 5 நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்தால், அக் கலங்களுக்கு பிற்பாடு பிராண வாயு கிடைத்த போதும் அவை இறப்பதைத் தடுக்க முடிவதில்லை. அது தான் உண்மை. ஆனால் ஏன்?

இதற்கு விடை கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்து விடும். இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும் முயற்சி ஆராய்ச்சியாக ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ஆராய்ச்சியானது கலங்களின் உள்ளே உள்ள சிறிய துணிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. மிட்டோகொன்ரியா (Mitochondria) எனும் அவைதான் கலங்களுக்குத் தேவையான சக்தியை, ஒட்சி ஏற்றம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இது இன்னுமொரு வித்தியாசமான கடமையையும் செய்கிறது. வழமைக்கு மாறான கலங்களை (உதா புற்றுநோய்க் கலங்கள்) நெறிப்படுத்தப்பட்ட முறையில் மரணிக்கச் செய்கின்றன. இது புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பு திட்டம் போலச் செயற்படுகிறது. எனவே 5 நிமிடங்களுக்குப் பின்னர் திடீரென ஒட்சிசன் கொடுக்கும் போது அக் கலங்களுக்கும் புற்றுநோய்க் கலங்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர முடியாமல் மரணிக்கச் செய்கின்றனவோ என எண்ணுகிறார்கள்.

ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் நாம் செய்வது என்ன? இருதயம் நின்று விட்ட ஒருவரை 10-15 நிமிடங்களுக்கு பின்னர் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க மருந்துகள் கொடுப்பதுடன் பிராண வாயுவையும் பம்ப் செய்கிறோம். இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்கிறோம். இது அவற்றின் மரணத்தில் முடிகிறது.

இதற்கு மாறாக மாற்று முறையில் சிகிச்சை செய்தபோது முடிவுகள் சாதகமாக இருந்தன. அதாவது இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தை செயற்கையாக heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இருதயத்தை துடிக்க வைத்தார்கள். 80 சத விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அத்துடன் குருதியின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், பிராண வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களை குறைக்க முடியும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஜசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் மரணித்தவருக்கும் சிகிச்சை செய்து 'உயிர்ப்பிக்க' முடியும். ஆராச்சிகள் தொடர்கின்றன. அது நாளாந்த செயற்பாட்டிற்கு வந்து, அதுவும் எங்கள் நாட்டிற்கு வந்து சேரும் வரை மாரடைப்பு வராதிருக்க பிரார்திப்போமாக.

kathirmuruga@hotmail.com
Quelle - Pathivukal

08 Februar 2008

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்

- இக்பால் -

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

Quelle - இக்பால்

06 Februar 2008

தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா?

- தமிழினி -

தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் "பெய்ன்கில்லர்' எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், "மைக்ரேன்' என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும். அமெரிக்காவில், தலைவலி ஆராய்ச்சிக்காகவே, "தேசிய தலைவலி ஆராய்ச்சி பவுண் டேஷன்' என்ற அமைப்பு உள்ளது. தலைவலியைப் போக்க, பல ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை வைத்து, பத்து எளிய வழிகளை இவ்வமைப்பு தொகுத்து வெளியிட்டுள்ளது. அவை என்ன தெரியுமா?

* அமெரிக்காவில், "பீவர் பியூ' என்ற மூலிகை கிடைக்கிறது. ஒரு சில நாள் தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால், தலைவலி திரும்பியே பார்க்காது. நம்மிடம் சுக்கு முதல் ஏகப்பட்ட மூலிகைகள் உள்ளன. அன்றாடம், உணவில் இவற்றை நாம் சேர்த்துக் கொண்டாலே போதும். தலைவலி மட்டுமில்லை, எந்த கோளாறும் அண்டாது. *"பெப்பர்மென்ட் ஆயில்' என்று சொல்லப்படும், வாசனைத் தைலத்தை தொடர்ந்து தடவி வந்தால், மூளையில் உள்ள நரம்புகளை முடுக்கி விடும். மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்புதான் வலி சிக்கலைதத் தடுக்கும். அதை முடுக்கி விடுவது தான் இந்த வாசனைத் தைலத்தின் வேலை.

* சில விட்டமின்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், மூளை நரம்புகளை முடுக்கி, முழு அளவில் இயங்கச் செய்கின்றன. அதனால், விட்டமின் சத்துகள் தரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும், பி 12 போன்ற விட்டமின்கள் அதிக பலன் தரும்.

*விட்டமின்கள் போல, கனிம சத்துக்கள் மிக முக்கியம். அதுவும், தலைவலி போன்ற வலிகள் வராமல் தடுக்கின்றன.

* தலைவலிக்கு முக்கிய காரணம், சோர்வு தான். போதுமான தூக்கமின்மையால் சோர்வு ஏற்படுகிறது. குறைந்தபட்சம் ஒருவருக்கு நாள் தோறும் ஏழு மணி நேர தூக்கம் தேவை. அது கிடைத்து விட்டால், தலைவலி வரவே வராது.

* மீன் உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள், "தலைவலியா... அப்படீன்னா?' என்று கேட்பர். ஆம், மீன் உணவில் உள்ள, "ஒமேகா 3' எண்ணெய், உடலின் சுகாதாரத்துக்கு பல அரிய பலன்களைத் தருகிறது.

* செயற்கை இனிப்புகள் சேர்ந்த உணவுப் பண்டங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே, தலைவலி வராது. செயற்கை இனிப்புகள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து விடுகிறது. அதனால், தலைவலி வருகிறது.

* அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தப் பாதிப்பும் இல்லாதது. லேசாக எறும்பு கடிப்பது போல தான் இருக்கும். தலைவலி இருக்கும் இடமே தெரியாது.

* யோகா பயிற்சி செய்து வந்தால், "மைக்ரேன்' தலைவலி கூட விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடும்.

* கடும் வேலை இருந்தாலும், அதை செய்துவிட்டு, சில நிமிடங்கள் கால் ஆற திறந்த வெளியில் நடக்கவும். ஏ.சி.,யை விட்டு வெளியில் வந்து இயற்கை காற்றை சுவாசியுங்கள். தலைவலி வந்த வழியே சென்று விடும்.

இப்போது புரிகிறதா... இனி மாத்திரை போடாதீர்கள், இந்த வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள், தலைவலி, அடுத்த சில மாதங்கள் நிரந்தரமாக போயே போய் விடும்.

quelle - tamilpiravagam