‘‘என் மகளுக்கு வாயிலே அடிக்கடி புண் வருது. மணத்தக்காளி சாப்பிடு நல்லதுன்னு சொன்னால் கேட்டால்தானே? அவளுக்கு இங்கிலீஷ் மருந்துகளிலேதான் நம்பிக்கை.’’
மருந்துக்கடைக்காரரிடம் ராஜாராமன் பேசிக்கொண்டே போனார். எப்போதும் அவர் அப்படித்தான். வந்தோமா, மருந்தைக் கேட்டுவாங்கிக் கொண்டு கிளம்பினோமா என்று கிடையாது. என்றாலும், இரண்டு காரணங்களுக்காக மருந்துக்கடைக்காரர் ராஜாராமனைப் பொறுத்துக்கொள்வார். ஒன்று, அவர் பல வருடங்களாக அந்தக் கடையின் வாடிக்கையாளர். இரண்டு, அவருக்கு மருந்துகளைப் பற்றிய ஞானம் நிறைய உண்டு.
‘‘குரோசின் கொடு, அல்லது மெட்டசின் கொடு’’ என்று மருந்தினுடைய பிராண்டின் பெயரைக்கூற மாட்டார். ‘‘பாரசிட்டமால் மாத்திரை நாலு வேணும்’’ என்று அந்த மாத்திரைகளின் அடிப்படையான பொருளைக் குறிப்பிட்டுத்தான் கேட்பார்.
‘‘வாய்ப்புண்ணுக்கு ரிபோஃப்ளேவின் அடங்கின மாத்திரை நாலு கொடுப்பா’’ என்றார்.
அவருக்குத் தெரியும் ரிபோஃப்ளேவின் என்பது ஒரு வகைப் புரதம் என்பது. உதடு, வாயின் உட்புறம் போன்றவற்றில் உள்ள மெல்லிய தசைகள் வெடிக்காமல் வழுவழுப்புடன் இருக்க, இந்தச் சத்து தேவைப்படுகிறது. இதுகுறித்த பிற தகவல்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
எந்தவிதமான இயற்கை உணவில் ரிபோஃப்ளேவின் அதிகம் காணப்படுகிறது?
கீரை வகைகள், வேர்க்கடலை ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். பயிர் வகைகளிலும் இந்தச் சத்து உண்டு.
பயிர் வகைகளை சமைக்கும்போதோ, நிலக்கடலையை வேகவைக்கும் போதோ ரிபோஃப்ளேவின் சத்து அழிந்து விடுமா?
சராசரி வெப்பத்தில் ரிபோஃப்ளேவின் அழிந்துவிடுவதில்லை. அதே சமயம் நிறைய நேரம் சூரிய வெளிச்சத்தில் படுகிற மாதிரி இந்த உணவுப் பொருள்களை வைத்திருந்தால், அவற்றில் உள்ள ரிபோஃப்ளேவின் சத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.
கருத்தரித்த பெண்களுக்கு அதிக அளவில் ரிபோஃப்ளேவின் தேவைப்படுமா?
அப்படி ஒன்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கவில்லை. என்றாலும், கருத்தரித்த பெண்களின் சிறுநீரில் உள்ள ரிபோஃப்ளேவின் அளவு, குறைவாகவே இருக்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். அதாவது அப்போது அவர்களது உடல் அதிக ரிபோஃப்ளேவின் புரதச் சத்தை ஈர்த்துக்கொள்கிறது என்று கூறலாம். இந்த வகையில் சற்றே அதிகமாக ரிபோஃப்ளேவின் கர்ப்பிணிப் பெண்களின் உணவில் இருக்க வேண்டும் என்று கூற இடம் உண்டு.
ரிபோஃப்ளேவின் என்பது ஒருவகை வைட்டமினா?
ஆம். Vitamin B யில் பல முக்கிய வகைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. B2 என்பதில் இரண்டு முக்கிய என்ஸைம்கள் உண்டு. அவற்றில் ஒன்று ரிபோஃப்ளேவின். மற்றொன்று நியாஸின்.
VitaminB பிரிவைச் சேர்ந்த மற்றவை குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே.
Vitamin B1 என்பது தியாமின் என்ற வேதியல் பொருளைக் குறிக்கிறது. மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் மூளை சரியாக வேலை செய்ய Vitamin B தேவை.
Vitamin B சத்தை எந்த வகை உணவுப்பொருள்களின் மூலம் பெறலாம்?
ராகி, சோளம், முட்டை, பன்றிக்கறி, முந்திரி போன்ற பருப்புகள் ஆகியவற்றில் Vitamin B1 இருக்கிறது.
உடலில் Vitamin B1 குறைவு ஏற்பட்டால் என்னவாகும்?
பெரிபெரி என்ற ஆரோக்கியக் குறைவு தோன்றும். தொடக்கத்தில் பசியின்மை, களைப்பு, தசைகளில் வலி ஆகியவை இருக்கும். கவனிக்காமல் விட்டால் கைகால்களில் தாங்கமுடியாத வலி, இதயத்தின் பணியில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படலாம்.
அதிகஅளவில் Vitamin B1 ஐ உட்கொண்டால் ஆபத்தா?
இல்லை. அதேபோல் ரிபோஃப்ளேவினை அதிகமாக உட்கொண்டாலும் உடலுக்குப் பாதகம் எதுவும் ஏற்படுவதில்லை.
பொதுவாகவே Vitamin B குழுவைச் சேர்ந்த பொருள்கள் தண்ணீரில் கரையக்கூடியவை. எனவே, சமைக்கும்போது நீரோடு சேர்ந்து இவையும் வெளியேறி விட வாய்ப்பு உண்டு. ஆகவே, Vitamin B உள்ள காய்கறிகளை சூப், சாலட் போன்ற வகை உணவுகளாக உட்கொள்ளுவது நல்லது.
ஆதர்ஷ்
Quelle-Kumutham
Keine Kommentare:
Kommentar veröffentlichen