24 Februar 2006
Tension எதனால்?
எதற்கும் கோபப்படாத அர்ச்சனா, அன்று கோபப்பட்டாள். ஃபைல்களைக் கிழித்துப் போட்டாள். வேலையைப் பாதியில் போட்டுவிட்டு, டென்ஷனாக வீட்டிற்கு வந்துவிட்டாள். ‘இனிமேல் வேலைக்கே போகப் போவதில்லை’ என்று கத்தினாள்.
‘மகளுக்கு என்ன ஆச்சு?’ என்று கேட்க பெற்றோருக்குப் பயம். இரண்டுநாள் ஆறப் போட்டார்கள். மூன்றாம் நாள் அவளாகவே நெஞ்சுஎரிச்சல் என்று டாக்டரைப் பார்க்க பெற்றோருடன் போனாள். இந்தச்சாக்கில் அர்ச்சனா இரண்டு நாட்களாக நடந்து கொள்ளும் விதத்தை டாக்டரிடம் தயங்கித் தயங்கிச் சொன்னார்கள்.
பெற்றோர் சொன்னதற்கும் டாக்டரின் பரிசோதனை முடிவுக்கும் நிறையத் தொடர்பு இருந்தது. அர்ச்சனாவுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் தாக்குவதற்கான அறிகுறிகள் நிறையத் தெரிந்தன. அதன் ஆரம்பக்கட்டம்தான் இந்தக் கோபம், டென்ஷன் என்று டாக்டர் சொன்னார்.
டென்ஷனுக்கும், இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி டாக்டர் சொல்லச் சொல்லத்தான் அர்ச்சனா டென்ஷனாவதைக் குறைக்கும் வழிமுறைகளை நாடிப் போனாள்.
டென்ஷன் எதனால்?
டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.
ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.
உடல்திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?
அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர்திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள், எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன்மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.
இவையன்றி கீழ்வரும் ஐந்து முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரெட் சிக்னல் காட்டி விட வேண்டும். அது ஓரளவிற்கு டென்ஷனைக் குறைக்க உதவும்.
1. நெஞ்செரிச்சல் (Heartburn): டென்ஷனால் வயிறானது அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்துவிடும். அதோடு எண்ணெய்ப் பதார்த்தம் உள்ளிட்ட சில வகை உணவுகள் உண்ணும்போது, அவை மேலும் தீவிரமடைந்து அமிலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு, நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் வந்துபடுத்தும். பிறகு டென்ஷனுக்குக் கேட்கவே வேண்டாம்.
விடுபடவழிகள்: ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இது டென்ஷனைக் குறைப்பது மட்டுமல்ல, உணவுக் குழாயில் தங்கியுள்ள அமிலங்களையும் துடைத்தெடுத்துவிடும். தாற்காலிகமாக நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும். ஃபாஸ்ட் புட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிடுங்கள். கூடவே, காபி, தக்காளி சாஸ், வெங்காயம், சாக்லெட், பெப்பர்மிண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
2. கை நடுக்கம்: கை நடுக்கம் இருந்தாலே மனிதர் கோபத்தில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம். காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தாலும், இந்த நிலை ஏற்படும்.
விடுபட வழிகள்: உங்களுக்குச் சேர வேண்டியதை மேலதிகாரியிடம் கேட்டுப் பெற முயற்சிக்கலாம். உங்களையும் மீறி ஒரு செயல் நடந்து, அதையட்டி கை நடுக்கம் ஏற்பட்டால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்ளலாம். பெண்கள் கைப்பைக்குள் கையை நுழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கை நடுக்கம் இருந்தால் மருத்துவர்தான் நல்லவழி.
3. திடீர் தலைச்சுற்றல்: டென்ஷனாக இருந்தால் சிலருக்குத் திடீரென்று தலைச்சுற்றல் வரும். ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.
விடுபட வழிகள்: தலைச்சுற்றல் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவேண்டும். உங்களுக்குத் தலைச்சுற்றல் இருந்தால் உடனே கீழே உட்கார்ந்து இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். காற்றை நன்றாக ஆழமாக உள்இழுத்து அதை நுரையீரலில் சிறிதுநேரம் தங்க வையுங்கள். பின்னர் மெதுவாக மூக்கின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இதனால், போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். தலைச்சுற்றல் இருக்காது. மீண்டும் ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.
4. தோல் அரிப்பு: சிலருக்கு டென்ஷன் ஆரம்பமாகும்போது, ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும்.
விடுபடவழிகள் :அரிப்புக் கண்டவர்கள் உடனே பென்சில் அல்லது கையில் கிடைக்கும் பொருள்களால் உடம்பை சொரியக்கூடாது. பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரிக்கும் இடத்தில் வைக்கலாம். இதற்கானலோஷன் இருந்தால் தடவலாம்.
5. அதிகப்பணம் செலவழிக்கும்போது: எதிர்பாராமல் அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்கும் நிலை வந்தால் சிலருக்கு டென்ஷனாக இருக்கும். இது உடல் சம்பந்தப்பட்டதல்ல, என்றாலும், மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே.
ஷாப்பிங் செல்லும்போது, கையில் உள்ள பணத்திற்குத் தக்கபடி என்னென்ன பொருள்கள் வாங்குவது என்று திட்டமிட்டுச் செயல்படுவது டென்ஷனைக் குறைக்க உதவும்.
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen