24 Februar 2006

Tension எதனால்?


எதற்கும் கோபப்படாத அர்ச்சனா, அன்று கோபப்பட்டாள். ஃபைல்களைக் கிழித்துப் போட்டாள். வேலையைப் பாதியில் போட்டுவிட்டு, டென்ஷனாக வீட்டிற்கு வந்துவிட்டாள். ‘இனிமேல் வேலைக்கே போகப் போவதில்லை’ என்று கத்தினாள்.

‘மகளுக்கு என்ன ஆச்சு?’ என்று கேட்க பெற்றோருக்குப் பயம். இரண்டுநாள் ஆறப் போட்டார்கள். மூன்றாம் நாள் அவளாகவே நெஞ்சுஎரிச்சல் என்று டாக்டரைப் பார்க்க பெற்றோருடன் போனாள். இந்தச்சாக்கில் அர்ச்சனா இரண்டு நாட்களாக நடந்து கொள்ளும் விதத்தை டாக்டரிடம் தயங்கித் தயங்கிச் சொன்னார்கள்.

பெற்றோர் சொன்னதற்கும் டாக்டரின் பரிசோதனை முடிவுக்கும் நிறையத் தொடர்பு இருந்தது. அர்ச்சனாவுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் தாக்குவதற்கான அறிகுறிகள் நிறையத் தெரிந்தன. அதன் ஆரம்பக்கட்டம்தான் இந்தக் கோபம், டென்ஷன் என்று டாக்டர் சொன்னார்.

டென்ஷனுக்கும், இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி டாக்டர் சொல்லச் சொல்லத்தான் அர்ச்சனா டென்ஷனாவதைக் குறைக்கும் வழிமுறைகளை நாடிப் போனாள்.


டென்ஷன் எதனால்?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.
ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.

உடல்திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?

அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர்திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள், எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன்மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.
இவையன்றி கீழ்வரும் ஐந்து முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரெட் சிக்னல் காட்டி விட வேண்டும். அது ஓரளவிற்கு டென்ஷனைக் குறைக்க உதவும்.

1. நெஞ்செரிச்சல் (Heartburn): டென்ஷனால் வயிறானது அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்துவிடும். அதோடு எண்ணெய்ப் பதார்த்தம் உள்ளிட்ட சில வகை உணவுகள் உண்ணும்போது, அவை மேலும் தீவிரமடைந்து அமிலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு, நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் வந்துபடுத்தும். பிறகு டென்ஷனுக்குக் கேட்கவே வேண்டாம்.

விடுபடவழிகள்: ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இது டென்ஷனைக் குறைப்பது மட்டுமல்ல, உணவுக் குழாயில் தங்கியுள்ள அமிலங்களையும் துடைத்தெடுத்துவிடும். தாற்காலிகமாக நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும். ஃபாஸ்ட் புட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிடுங்கள். கூடவே, காபி, தக்காளி சாஸ், வெங்காயம், சாக்லெட், பெப்பர்மிண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. கை நடுக்கம்: கை நடுக்கம் இருந்தாலே மனிதர் கோபத்தில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம். காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தாலும், இந்த நிலை ஏற்படும்.

விடுபட வழிகள்: உங்களுக்குச் சேர வேண்டியதை மேலதிகாரியிடம் கேட்டுப் பெற முயற்சிக்கலாம். உங்களையும் மீறி ஒரு செயல் நடந்து, அதையட்டி கை நடுக்கம் ஏற்பட்டால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்ளலாம். பெண்கள் கைப்பைக்குள் கையை நுழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கை நடுக்கம் இருந்தால் மருத்துவர்தான் நல்லவழி.

3. திடீர் தலைச்சுற்றல்: டென்ஷனாக இருந்தால் சிலருக்குத் திடீரென்று தலைச்சுற்றல் வரும். ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.

விடுபட வழிகள்: தலைச்சுற்றல் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவேண்டும். உங்களுக்குத் தலைச்சுற்றல் இருந்தால் உடனே கீழே உட்கார்ந்து இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். காற்றை நன்றாக ஆழமாக உள்இழுத்து அதை நுரையீரலில் சிறிதுநேரம் தங்க வையுங்கள். பின்னர் மெதுவாக மூக்கின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இதனால், போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். தலைச்சுற்றல் இருக்காது. மீண்டும் ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

4. தோல் அரிப்பு: சிலருக்கு டென்ஷன் ஆரம்பமாகும்போது, ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும்.

விடுபடவழிகள் :அரிப்புக் கண்டவர்கள் உடனே பென்சில் அல்லது கையில் கிடைக்கும் பொருள்களால் உடம்பை சொரியக்கூடாது. பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரிக்கும் இடத்தில் வைக்கலாம். இதற்கானலோஷன் இருந்தால் தடவலாம்.

5. அதிகப்பணம் செலவழிக்கும்போது: எதிர்பாராமல் அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்கும் நிலை வந்தால் சிலருக்கு டென்ஷனாக இருக்கும். இது உடல் சம்பந்தப்பட்டதல்ல, என்றாலும், மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே.

ஷாப்பிங் செல்லும்போது, கையில் உள்ள பணத்திற்குத் தக்கபடி என்னென்ன பொருள்கள் வாங்குவது என்று திட்டமிட்டுச் செயல்படுவது டென்ஷனைக் குறைக்க உதவும்.

செம்பருத்தியின் மருத்துவக் குணம்

_ கே.சுந்தரி

பொன்னம்மாவுக்கு சதா தன் மகள் பூரணி பற்றித்தான் கவலை. அவள் வயதொத்த பெண்களெல்லாம் பூப்பெய்தி, கல்யாணத்திற்கு வரிசையாக நிற்க... பூரணி மட்டும் இன்னும் வயதுக்கு வராமல் இருந்தாள். எங்கெங்கோ காட்டிவிட்டாள்... என்னென்ன மருந்தோ கொடுத்துவிட்டாள்... ஆனால், மொட்டு மலரத்தான் காணோம். இந்த விஷயம் தெரிந்து பொன்னம்மாவின் அண்ணன் மகன் வடிவேலுவுக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். பிறந்ததில் இருந்தே பூரணிக்கும் வடிவேலுக்கும்தான் கல்யாணம் என்று ஆசை காட்டி வந்ததால், அது நிறைவேறாமல் போய் விடுமே என்ற வருத்தம் அவளையும் மகள் பூரணியையும் வாட்டி வதைத்தது. பக்கத்து வீட்டுப் பெரியம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லி அழுதாள்.

‘‘பயப்படாதே பொன்னம்மா. உன் மகளுக்கு வந்திருக்கிற பிரச்னையை நான் சரி செய்யறேன்’’ என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த பூந்தோட்டத்தில் இருந்து, தினமும் மூன்று செம்பருத்தி பூவைப் பறித்து வந்து, அவற்றை நெய்யில் வறுத்து பூரணிக்குச் சாப்பிடக் கொடுத்தாள். தொடர்ந்து ஒருமாதம் இப்படிக் கொடுத்து வந்திருப்பாள்... எண்ணி முப்பத்திரண்டாவது நாள்... வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பூரணி, ‘‘அய்யோ! அம்மா!’’ என்று வயிற்றைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள். ஆமாம், பூரணி பெரிய மனுஷியாகி விட்டாள். செய்தியறிந்த உடனே பொன்னம்மா பக்கத்து வீட்டுப் பெரியம்மாவுக்கு நன்றி சொல்லப் போனாள்.

‘‘பெரியம்மா, எம் பொண்ணு உங்க வைத்தியத்தால பெரிய மனுஷியாயிட்டா... ரொம்ப நன்றிம்மா’’ என்று கண்ணீர் மல்க நின்றாள். ‘‘அதை எனக்குச் சொல்லாத பொன்னம்மா... செம்பருத்திக்குச் சொல்லு... அதுதான் உன் பொண்ணை பூக்க வச்சுது...’’ என்று கூறிச் சிரித்தாள்.

செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.

உடல் உஷ்ணம் குறைய...
உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

வெட்டை நோய் குணமாக...
ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

இருதயம் பலம் பெற...
இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

பேன் தொல்லை ஒழிய...
சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு...
சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.’’

_ கே.சுந்தரி

Flu காய்ச்சலை மருந்தில்லாமல் விரட்ட....


கோடைகாலம் முடிந்து பருவமழை ஆரம்பமாகப் போகிறது. இந்தச் சமயத்தில்தான் சளி, காய்ச்சல் என்று மாறிமாறி வந்து தொல்லைப்படுத்தும். குறிப்பாக, பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பும் தாய்மார்களுக்கு, இந்தக் கவலை அதிகம். முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாரசிட்டமால்களை வாங்கி அடுக்கிவைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் எச்சரிக்கையாக இருந்தும் என்ன பயன்? விடுமுறை முடிந்து ப்ளஸ்டூவுக்குப் போன ராஜிக்குத் தொடர்ந்து நான்கு ஐந்து நாட்களாக ஃப்ளு(Flu) காய்ச்சல். டாக்டர் தொடர்ந்து மருந்து தந்தும் கட்டுப்படவில்லை. ஒருவேளை வேறொரு பெரிய நோய்க்கு இது அறிகுறியாக இருக்குமோ என்ற பயம் ராஜியின் பெற்றோருக்கு வந்துவிட்டது.

பரிசோதனையின் முடிவு பயப்படும்படியாக இல்லைதான். ஆனால், ராஜியின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி (immune) வெகுவாகக் குறைந்திருப்பது தெரியவந்தது. இதனால்தான் அவளுக்குத் தொடர்ந்து காய்ச்சல். இதை இப்படியே விட்டால் எந்த நோயும் எளிதாக நுழைந்துவிடும் என்பதையும் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.

எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இந்நோயெதிர்ப்புச் சக்தியானது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும். நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Minerals) மற்றும் கனிமங்களின் (Vitamins) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும்.

வைட்டமின்களும் கனிமங்களும் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள உட்கொள்ளத்தான், உடலிலுள்ள செல்களால் எதிர்ப்புச் சக்தியைச் அதிகம் உற்பத்தி செய்யமுடியும்.

ஒவ்வொரு வைட்டமின்களும் கனிமங்களும் காய்ச்சலைத் (flu) தரும் கிருமிகளை எதிர்த்து சண்டைபோடும் தன்மை கொண்டவை. அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை விரட்டியடிக்கலாம்! நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்துக்களையும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

1.காய்ச்சல் கிருமிகளை எதிர்க்கும் காப்பர் சத்து:
நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக்கூடியவை. இதற்கு நீங்கள் உண்ணும் உணவானது ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கவேண்டும். காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது.

பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது. இவற்றை நீங்கள் எடுத்துக்கொண்டால், ஃப்ளு காய்ச்சலுக்கு எதிரான ஊட்டச்சத்து கிடைக்கும்.

2.வைட்டமின் E:
இளமையிலிருந்தே வைட்டமின் ணி சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் ணி_யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல... நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும். இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.

சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் ணி அதிகம் உள்ளதால், இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

3.வைட்டமின் B12:
B12ன் தலையீட்டால்தான் காய்ச்சலைத் தரும் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம்.

ஈரல், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரைவகைகள், பட்டாணி, சூரியகாந்திவிதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன.

4.துத்தம் (ZINC):
உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது.

தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன.

5.தாவர வேதிப்பொருள்:
உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை.

வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை.

6. சந்தோஷமான சூழல்:
குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை.... இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம்.

இரா மணிகண்டன்
நன்றி - குமுதம்

இளமை காக்கும் தலை மை

டாக்டர் எல். மகாதேவன்
ayurved@sancharnet.in
panchakarma101@yahoo.co.in

இளநரை

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.

தலைக்குச் சாயம் (Hair Dye)

சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

ஷாம்பூ (Shampoo)

அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. சோறுவடித்தெடுத்தபின் கிடைக்ளகும் கஞ்சிநீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும். அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வழவழா என்று வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ. இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும். சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் லு பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.

வழுக்கை (Baldness)

வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.

அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.

முடி உதிர்தல் (Hair loss)

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.

பிருங்காமல தைலம்

நல்லெண்ணெய் 1 லிட்டர்

கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்

நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்

பசுவின்பால் 4 லிட்டர்

அதிமதுரத்தூள் 60 கிராம்

கரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர். இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன்கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப் போக்கும்.

பேன் (Tics)

சில வீடுகளில் பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்குத் தாயார் படாத பாடுபடுவாள். பேனைக் கொல்ல ஏதாவது மருந்திருக்கிறதா என்று கேட்பாள். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும். கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும். வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும். எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை. சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.

பொடுகு (Dandruff)

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும். பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வராமலிருக்க ஊமத்தையிலையால் காய்ச்சப்பட்ட துர்தூர பத்ராதித் தைலத்தைப் பயன்படுத்தவும். கேரளத்தில் சில பெண்கள் தேங்காய்ப்பாலைத் தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளருகிறது. எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் இதுபோல் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடிகளை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சவேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு உபயோகிக்கலாம். அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காயெண்ணெயில் காய்ச்சினால் அது நல்லதொரு முடிவளரும் தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியைத் தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.

தேவையற்ற முடியை அகற்றுவது (Removing unwanted hairs)

பழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள். இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள். குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும். மஞ்சளை அரைத்துத் தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் அது மயிர்களை அகற்றும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பலன் கிடைப்பதில்லை. Waxing மற்றும் Electrolysis சில நேரங்களில் நன்றாகப் பயன்படுகிறது.

nantri - ulagathamizh

23 Februar 2006

மனச்சோர்விலிருந்து விடுபட


மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான்.

கவிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று மருத்துவமனையில் சேர்த்தார்கள். ‘திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை. மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவரது உடம்பில் இருந்த ரத்தக் காயங்களைப் பார்த்த மருத்துவர்கள், அவருக்கு வந்திருக்கும் பிரச்னையை ஆழமாக அலசிப் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தனக்குத்தானே ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு, அதைப் பார்த்து ரசிப்பதில் ஒருவித சந்தோஷத்தை கவிதா அனுபவித்து வந்த உண்மை தெரியவந்தது. கத்தியாலும் பிளேடாலும் அவர் தன் கைகளில் அறுத்துக் கொண்டிருக்கிறார்.

‘‘கவிதா ஒரு வகையான சைக்கோடிக் மனச்சோர்வால் (Psychotic Depression) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உடனே சிகிச்சைக்கு உட்படுத்தினால்தான் அவரைக் குணப்படுத்த முடியும்’’ என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான். இவர்களிடம் அடிப்படையான சில குறைகள் வெளிப்படையாகத் தென்படும். சக மனிதர்கள் மீது வெறுப்பு, மற்றவர்களால் கைவிடப்பட்டு விட்டோமோ என்ற மனநிலை, இதனால் பிரச்னைகளில் இருந்து விடுபட உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரேவழி என்ற எண்ணம் எழும். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு, சகஜநிலைக்கு வந்தவர்கள்போல் காணப்படுவார்கள்.

சைக்கோடிக் மனச்சோர்வு, லட்சத்தில் நூறு பேருக்கு இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நூறு பேரில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது என்றால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

அறிகுறிகள்:

நம்பிக்கைக்குரியவர்களே கைவிட்டது போன்ற உணர்வு அடிக்கடி எழுதல், மனதை ஒரு முகப்படுத்த முடியாமை, சின்னச் சின்ன விஷயங்களில் கூட தீர்மானம் எடுக்க முடியாமை, சுற்றியிருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழகமுடியாத நிலை, பொழுது போக்குகளில் ஆர்வமின்மை, யாரோடும் ஒத்துப் போகாமல் எதையும் எதிர்க்கும் மனப்பான்மை, அமைதியின்மை, எரிந்து விழுதல், பசியின்மை, பாலியலில் ஈடுபாடின்மை, அடிக்கடி தலையில் பாரம், என்று இந்த நோய்க்கு பல அறிகுறிகள் இருக்கின்றன.

மூளையில் உள்ள செரட்டோனின் என்ற இரசாயனப் பொருளின் மாற்றத்திற்குத் தக்கவாறுதான் மனச்சோர்வு மனிதனைத் தாக்குகிறது. அந்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள், சிகிச்சைகள் இப்போது எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடியமட்டிலும் சில பயிற்சிகளை நாள்தோறும் கடைப்பிடித்துவந்தால் சைக்கோடிக் மனச்சோர்வு நோய் நம்மை அண்டாது பாதுகாக்க முடியும். அவற்றுள் சில:

1. உடற் பயிற்சிகள்:

காலையில் எழுந்ததும். பூனை தன் உடலை நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டி பயிற்சி செய்தால் மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம் பாயும். சுறுசுறுப்புத் தானாக வரும்.

இது தவிர, ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி ஆகியவை அவசியம்.

2. யோகா, தியானம்:

ஒருவருக்குப் போதிய நேரமும் விருப்பமும் இருந்து யோகா செய்தால் போதும், உளச்சோர்வு நோய் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே இணையச்செய்வது யோகா பயிற்சி மட்டுமே.

அதேபோல், குளித்து முடித்தவுடன், கண்களை மூடிக்கொண்டு, மனதில் வரும் எந்தப் பொருளின் மீதும் மனதைச் செலுத்தி ஒருமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மனதிற்குப் புத்துணர்ச்சியும், சிந்தனைத் தெளிவும் கிட்டும்.

3. உணவில் கட்டுப்பாடு:

எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் சைக்கோடிக் மனச்சோர்வு நோய்க்கு ஆரம்பகால நுழைவாயில்கள் (நோய் தாக்கிய பின்னர் உடல் இளைத்துவிடும் என்பது வேறு விஷயம்). அதற்குக் கட்டுப்பாடான உணவுதான் சிறந்த சிகிச்சை. காய்கறிகள், பழங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நெய், பாலாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. புகை, மது கூடாது:

புகை பிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதனால் சைக்கோடிக் மனச் சோர்வு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீத முடிவுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

5. நிம்மதியான தூக்கம்:

ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப்போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

6. வேலையில் அக்கறை:

செய்யும் வேலையில் அதிக அக்கறை எடுத்து ஒருமனத்துடன் செயல்பட்டால் மனச்சோர்வுக்கு இடமே இருக்காது. வேலை நேரத்தைத் திட்டமிடத் தெரியாதது, அளவுக்கு அதிகமான வேலைப் பளுவை இழுத்துப் போட்டுக்கொள்வது, மனச்சோர்வை தூண்டக்கூடியவை. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

7. போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்:

தேவையற்ற, முறையற்ற பேராசையையும் போட்டியையும் தவிர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர, மனம் பலவீனப்படுவதோடு, எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டிவரும். இவைதான் பலருக்கு மனச்சோர்வு நோய் வரக் காரணம்.

8. சமுதாயத்தோடு ஒத்துப்போதல்:

நல்ல சமூக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பிலும் நல்ல துணையை, தோழமையை உருவாக்கும். உறவுகளுடன் சேர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்வது, இசை, பாட்டு என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும் சமூக உறவோடு கலப்பதற்கு உதவும்.

சைக்கோடிக் மனச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலம் சிதைந்து விடும். அச்சம், சோர்வு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீத செயல்களுக்கு இட்டுச் செல்லும். அதனால், மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டவுடன், ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று, உடலையும் மனதையும் முழு செக்கப் செய்துகொள்வது பல வழிகளிலும் உதவக்கூடும்.

quelle - Kumutham