24 Februar 2006

விழித்திரை கோளாறுக்கு அதிநவீன சிகிச்சைமுறை

_பாரதிதமிழன்

கார்னியாவில் ஏற்படும் குறைபாடுகளைச் சரி செய்ய கார்னியா மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது செய்யப்பட்டு வருகிறது. ஐந்து அடுக்குகள் கொண்ட கார்னியாவில் ஏதாவது ஒரு அடுக்கில் பிரச்னை ஏற்பட்டாலும் மொத்த கார்னியாவையே மாற்றும் முறைதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் நிறைய சிரமங்கள் உள்ளன. இந்த முழு கார்னியா மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிலாக ‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி’ என்கிற புதிய நவீன முறை கண்டுபிடிக்கப்பட்டது. டச் நாட்டின் மிகச் சிறந்த மருத்துவர் டாக்டர் ஜெரிட் மெலஸ் இந்த புதிய நவீனமுறை அறுவை சிகிச்சையைக் கண்டு பிடித்தார்.

‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி’ அறுவை சிகிச்சை முறையைப் பிரபலப்படுத்திய அமெரிக்க டாக்டர் மார்க்டெர்ரி, மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த டாக்டர் முகமது அன்வர் ஆகியோர் சமீபத்தில் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி, நவீன அறுவை சிகிச்சை முறை குறித்து டாக்டர் மார்க்டெர்ரியிடம் கேட்டபோது:

‘‘இந்தப் புதிய கார்னியா அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் கார்னியாவின் மேல் அடுக்குகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு செய்யும் சிகிச்சைக்கு ‘டீப் ஆன்டீரியர் லெமல்லர் கெராடோபிளாஸ்டி’ என்று பெயர். இந்த முறை பரவலாக இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் செய்யப்படுகிறது. இந்த முறை அறுவை சிகிச்சையில், கார்னியாவின் மேல் அடுக்குகளில் காயமோ, புண்ணோ ஏற்பட்டால் மொத்தமாக கார்னியாவை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, எடுத்த பகுதிக்கு மட்டும் மாற்று கார்னியா பொருத்தப்படும்.

ஆனால், இந்த முறையில் கார்னியாவின் இரண்டு கீழ் அடுக்குகளில் பாதிப்பு ஏற்பட்டால் கார்னியாவை மொத்தமாக எடுத்துவிட்டு மாற்று கார்னியா பொருத்தவேண்டும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய ‘டீப் லெமல்லர் எண்டோதீலியல் கெராடோபிளாஸ்டி’ என்ற நவீன கார்னியா மாற்று அறுவை சிகிச்சை உள்ளது. இந்த முறையில், கார்னியாவில் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மாற்று கார்னியாவைப் பொருத்தினால் போதுமானது.

இந்த அறுவை சிகிச்சையில் முழுமையாக கண்களைத் திறந்து வழக்கமான அறுவை சிகிச்சை போல செய்யாமல் ஐந்து மில்லி மீட்டர் துளை வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் வீட்டிற்குப் போய்விடலாம். ஒரு சில நாட்களில் வழக்கமான எல்லா வேலைகளையும் செய்ய முடியும். ஒவ்வாமை, அதிக நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்படாது’’ என்றார் டாக்டர் மார்க்டெர்ரி.

‘டீப் லெமல்லர் எண்டோதீலியல் கெராடோ பிளாஸ்டி’ என்ற நவீன அறுவை சிகிச்சையை, இந்தியாவிலேயே முதல் முறையாக சங்கர நேத்ராலயாவில் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ராஜேஷ் போஃக்லா. இவர் அமெரிக்க டாக்டர் மார்க்டெர்ரியிடம் சில மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.

இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் ராஜேஷ் போஃக்லாவிடம் கேட்டோம்.

‘‘இந்தியாவில் 46 லட்சம் பேர் கார்னியாவில் கோளாறுகள் ஏற்படுவதால் பார்வையிழந்து தவிக்கின்றனர். ஒவ்வாமை, விபத்து போன்ற காரணங்களினால் கார்னியா பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர மரபியல் காரணங்களினாலும் கார்னியாவில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

வழக்கமாக செய்யப்படும் மொத்த கார்னியா மாற்று அறுவை சிகிச்சையில், திசுக்கள் ஒத்துக் கொள்ளாமை, நீண்ட நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியதினால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற பிரச்சனைகள் இருந்தன. இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை, இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது’’ என்றார் டாக்டர் ராஜேஷ் போஃக்லா.

பார்வை இழந்தவர்களுக்கு, இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை முறை நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.

பாரதிதமிழன்
nantri-kumutham

Keine Kommentare: