27 Februar 2006

நியூரோடிக் அச்சம் (Neurotic)

நிர்மலாவுக்கு திடீரென்று உடம்பு வியர்க்கத் தொடங்கியது. இருக்க இருக்க உடல்நடுக்கம் கூடியது. இதயத்துடிப்பு என்றைக்கும் இல்லாத அளவிற்கு அதிகமானது. எங்கே மயக்கமடைந்து மூர்ச்சையாகி கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தார்.

நிர்மலா இயல்பாக இல்லை என்பதை அவரது கணவர் செல்வம் புரிந்து கொண்டார். ஆபீஸ§க்கு லீவு சொல்லிவிட்டு, மனைவியிடம் ஆறுதலாகப் பேசி மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டார்.

நிர்மலாவைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர், செல்வம் ‘‘உங்க மனைவியைத் தக்க சமயத்தில் அழைத்து வந்துட்டீங்க. இல்லைன்னா நிர்மலாவின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்’’ என்று சொல்லிவிட்டார்கள். செல்வம் ஆடிப்போய்விட்டார். இவ்வளவு சீரியஸான நிலையிலா நிர்மலா இருந்திருக்கிறாள். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சிகிச்சைக்குச் சம்மதித்தார்.

திருமணத்திற்கு முன்பு நிர்மலாவிற்கு இந்த மாதிரியெல்லாம் வந்ததில்லை. திருமணத்திற்குப்பின் ஏதோ ஒருவகை அச்சம் அவரை வாட்டத் தொடங்கிவிட்டது. வேறு பிரசினையாக இருந்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், தனக்கு எதைப் பார்த்தாலும் எந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் அச்சமாக இருக்கிறது என்று சொல்லத் தயங்கினார். அந்த அச்சம்தான் அவரை இன்று இவ்வளவு தூரத்திற்குக் கொண்டு வந்துவிட்டது.

அச்சம் தானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்பதற்கு ராகவி உதாரணம். அச்சம் காரணமாக வரும் பிரசினைகள் எப்படியிருக்கும் என்பதை அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.

நியூரோடிக் அச்சம் (Neurotic)

இதை நியூரோடிக் அச்சம் என்கிறார்கள். பார்த்தால் சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் அஞ்சி நடுங்குவார்கள்.

அஞ்ச வேண்டிய சூழ்நிலையாக இருக்காது. ஆபத்தில்லா இடமாக இருக்கும் என்றாலும் பயந்து பயந்து நடுங்குவார்கள்.

எதோ ஆபத்தான சமயத்தில் அச்சம் வருவது மனித இயல்பு. இயற்கையான நிகழ்வும்கூட. இது எல்லாருக்கும் பொருந்தும். எல்லார் வாழ்க்கையிலும் அப்படியரு அச்சம் நிகழ்ந்திருக்கும்.

ஆனால், சிலர் தினசரி வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அச்சப்படுவார்கள். அச்சப்படும் நோய் (Neurotic) உள்ளவர்களுக்கு இது மிகப் பெரிய விஷயம்தான்.

ராகவி பிறந்ததில் இருந்தே செல்லமாக, எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்தவள். துன்பம் என்றால் என்ன என்பது அறியாமலே இருந்து விட்டாள்.

திருமணத்திற்குப்பின் எதோ இனம் புரியாத ஒரு பயம் அவளைத் தொற்றிக் கொண்டது. எப்படி நாம் குடும்பம் நடத்தப் போகிறோம் என்ற தேவையற்ற பயம் அவளைத் தொற்றிக் கொண்டது.

ஒருமுறை கணவருடன் ஸ்கூட்டரில் வண்டலூர் ஜூ சென்றபோது, இடையில் ஒருவர் காரில் அடிபட்டுக் கிடந்ததைப் பார்த்துவிட்டார். அந்த சம்பவத்திற்குப் பின், இரண்டு நாள் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்துவிட்டார். காரணம் பயம். கணவர் வீடு திரும்பும் வரை மனம் அடித்துக் கொள்ளும். கணவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தும் பயப்படத் தொடங்கிவிட்டார்.

அச்சம் அவரை பலவீனப்படுத்தி, சிறுவர்களைப் போல சக்தியின்றி நடந்து கொள்ள வைத்து விட்டது.

அறிகுறிகள்:

நியூரோடிக் அச்சம் உள்ளவர்கள் எப்படிச் செயல்படுவார்கள்?

1. எதிர்த்துப் பேசமாட்டார். தன்னைத் தாக்குபவரைக்கூட எதிர்த்துத் தாக்கமாட்டார். இயற்கைக்கு விரோதமான முறையில் தமக்குச் சாதகமாகவே நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். தங்கள் உரிமையைக் கூட காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கமாட்டார்கள்.

2. அடிமைத்தனமாக நடந்து கொள்வார்கள். பொறுப்பு அடக்கப்பட்டு விடும். சுதந்திரமே இல்லாதவர் போல் நடந்து கொள்வார்கள். சுயேச்சையாக எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள்.

3. யாரைப் பற்றியும் யாரிடமும் புகார் செய்யமாட்டார்கள். அதைப் பற்றிய கருத்தும் தெரிவிக்கமாட்டார்கள். தவறே நடந்திருந்தால் கூட அதை தைரியமாக சுட்டிக்காட்டப் பயப்படுவார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டால்கூட சங்கடத்தில் நெளிவார்கள். எதிரான கருத்துத் தெரிவிக்கவே மாட்டார்கள்.

4. யாராவது அன்பாக நடந்து கொண்டால் கூட பயத்தின் காரணமாக நம்ப மாட்டார்கள். அதனால் பலரின் நட்பு கிடைக்காமல் போகும். குடும்ப உறுப்பினர்களிடையே கூட அந்நியோந்யம் இல்லாமல் போய் விடும்.

இதெல்லாம் நியூரோடிக் அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தைதான். இது எளிதில் இனம் காணக் கூடியது. அதனால் அதிகம் பயப்படத் தேவையில்லை. வெளியில் தெரிந்தவுடன் நிவர்த்தி செய்து விடக்கூடியதுதான். ஆனால், இந்நோய் உள்ளவர்கள் தனக்கு அச்சமாக இருக்கிறது என்றாவது சொல்லத் தைரியம் வேண்டும்.

பாதிப்புகள்:

இப்படிப்பட்டவர்களுக்குத்தான் பயம் பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதனால் கவலை அடைவார்கள். இதனால் உடலில் வேர்வை, நடுக்கம், இதயத் துடிப்பு ஏற்படும். சிறுகுடல்களில் பெரிய பாதிப்பை உண்டாக்கும். உணர்வில் கொதிப்பை உண்டாக்கி மூர்ச்சை உண்டாக்கும் இவருக்கு இதுவே தீவிரமாக இருந்தால் மரண பயமாகக் கூட ஏற்பட்டு விடும்.

அச்சத்தில் இருந்து விடுபட வழிகள்:

1. வாழும் முறையை மாற்ற வேண்டும். அது வாழும் இடமாக இருக்கலாம், சுற்றியுள்ள மனிதர்களாக இருக்கலாம். சீதோஷ்ண நிலையாக கூட இருக்கலாம். இதில் மாற்றங்கள் செய்யச் செய்ய மனமும் மாற்றத்திற்கு உட்பட்டு பாதுகாப்பான எண்ணத்தை உருவாக்கும்.

2. பயப்படவைக்கும் சூழ்நிலையை எதிர்த்துப் போராட வேண்டும். அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொன்றிற்கும் பயப்படத்தேவை இல்லை என்று நமக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்.

3. அச்சம் தரும் சந்தர்ப்பங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் ஆபத்தைத் தவிர்ப்பதும் அதிலிருந்து தப்புவதும் நம் கையில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை வரவேண்டும். தவிர்ப்பதும் தப்புவதும் எப்படி என்று தெரிந்து கொண்டாலே அச்சம் நம்மை நெருங்காது. தனிமையில் இருந்தால் பயமாக இருக்கிறது என்றால் அதைத் தவிர்ப்பதும் இதில் அடங்கும்.

4. கவலை கூடாது. எடுத்ததற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. பள்ளிக்குச் செல்லும் குழந்தை வீடு திரும்பும் வரை மனத்தை அச்சத்துடனேயே, சந்தேகத்துடனேயே வைத்திருக்கக் கூடாது.

5. எல்லாம் நன்மைக்கே என்ற மனப்பான்மையை வளர்க்க வேண்டும். எதையும் பாஸிட்டிவாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு உங்களுக்கு உதவுவதுதான் யோகா, தியானம், இசை போன்றவை.

6. அச்சம் வந்தால் பாடலாம். மனசுக்குள் நமக்குப் பிடித்த பாட்டைப் பாடிக் கொண்டே இருந்தால், அச்சம் தரும் சிந்தனை குறையும் என்கிறார்கள்.

7. உடலில் உள்ள ரசாயன மாற்றங்களால் கூட இந்த அச்ச நோய் வர வாய்ப்பு உண்டு. அதனால் முறையான உடற்பயிற்சி அவசியம் தேவை.

8. எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறுப்பினர்களிடமோ, தொண்டர்களிடமோ கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கருத்துக்களை அவர்கள் ஏற்கும் வகையில் வாதிடப் பழகிக்கொள்ள வேண்டும்.

அச்சத்தால் நமக்கு எதுவும், நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே பலர் பணிந்து போவார்கள். விட்டுக் கொடுத்து விடுவார்கள். எளிதில் அடிமைப்பட்டுப் போய்விடுவார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, இவர்களிடம் காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இதற்கு இடம் கொடுக்காமல் இருக்க, உங்களை நீங்களே தைரியப்படுத்திக் கொள்வதுதான்.

அதீத அச்சம் காரணமாக உடல் அளவில் பாதிப்பு ஏற்படும் போது, நீங்கள் மருத்துவரை நாடவேண்டும். அதற்கென்று பிரத்யேகமாக மருந்துகள் வந்துவிட்டன.

- இரா.மணிகண்டன் -
நன்றி - குமுதம் Health

Keine Kommentare: