27 Februar 2006

பல் வலி

_ எஸ். அன்வர்

"பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது.

பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது.

படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், வாக்குவாதம், சண்டை வந்து குடும்ப நிம்மதியையே கெடுத்து விடும்.

இரண்டாவது, 28 வயதில் பற்கள் சொத்தையாகி விட்டதால், யாரிடமும் பல் தெரிய சிரித்துப் பேச முடியவில்லை. தன் முகத்தின் அழகே கெட்டுவிட்டதோ என்ற மனக்கவலை வேறு.

அவரது பற்களைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது சொத்தை விழுந்த இரண்டு பற்களையும் பிடுங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் மற்ற பற்களையும் பதம் பார்த்து விடும் என்று சொல்லி விட்டார்கள்.

சிறு வயது முதல் பற்களைப் பாதுகாக்க மறந்த அவரது அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பதை டாக்டர்கள் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள்.


இதயம், சிறுநீரகம், போன்று பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம், பல் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள், முடக்கு வாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, தோலில் ஒவ்வாமை, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றிற்குக் காரணமானாலும் ஆகலாம்.

பல் சொத்தை ஏன் விழுகிறது?

நம் கடைவாய்ப் பற்களில் உள்ள பள்ளங்களில் உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்வதாலும் அதைச் சரியாக சுத்தம் செய்யாததாலும் பிளாக் எனப்படும் பல்பாசை உண்டாகிறது. இந்தப் பல்பாசை ஒருவகை நுண்ணுயிரிகளுக்கு இடமளிக்கிறது.

இந்தப் பல்பாசை பசைத்தன்மையுடன் விளங்குவதால் நாம் உண்ணும் உணவில் சிறுபகுதி அதில் ஒட்டிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்ளும் இனிப்பு, ஸ்டார்ச் வகை உணவு துணுக்குகளை உண்டு, இனப்பெருக்கம் செய்து வளர்ந்து, லேக்டிக் ஆசிட் எனப்படும் ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. இந்த அமிலங்கள் பல்லின் எனாமலில் சொத்தை ஏற்படுத்தி பிறகு அது மெதுவாக உள்ளே பரவுகிறது. ‘டென்டின்’ என்ற உணர்வுப் பகுதியை அது தாக்கியவுடன் கூச்சமும், லேசான வலியும் உண்டாகிறது.

பல் சொத்தை, அருகில் உள்ள பற்களுக்கும் பரவக் கூடிய வாய்ப்புள்ளதால், பல்லில் நிற மாற்றமோ, கூச்சமோ ஏற்பட்டால் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

முதலுதவி

சாப்பாட்டுத் துகள்கள் குழிக்குள் சிக்கிக் கொண்டால் குண்டூசி, குச்சி, நாக்கு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எடுக்கக் கூடாது. பற்களில் குழி (சொத்தை) இருந்தால் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, இனிப்பானதையோ சாப்பிடும்போது பல் வலி உயிரை எடுக்கும். இளஞ்சூடான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம்.

சிறிய பஞ்சு உருண்டையில் க்ளோவ் ஆயில் விட்டு, அதை குழி உள்ள இடத்தில் கவனமாக வைக்கலாம். வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். இவை யாவும் முதலுதவி மட்டுமே.

உடனே நீங்கள் செய்ய வேண்டியது மருத்துவரைப் பார்த்து, குழியை அடைக்க வேண்டும். அல்லது ரூட்கேனல் ட்ரீட்மெண்ட் எடுத்தாக வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பல்லைப் பிடுங்கி விட்டு புதிய பல்லைக் கட்டிக் கொள்ள வேண்டும். உதடு கடித்தல், நகம் கடித்தல், பல் குத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.

நீங்கள் சிரிக்கும்போது மற்றவர்கள் பயப்படாமல் இருக்க இவை உதவக் கூடும்.

பிரபல பல் நோய்கள் நிபுணர் டாக்டர் என்.வி. ஆறுமுகம் தரும் விளக்கம் :

ஈறுகளிலிருந்து ரத்தம் கசிவது எதனால்?

பாக்டீரியாக்களால் ஈறுகளில் ஏற்படும் ‘இன்ஃபெக்ஜன்’ தான் இதற்குக் காரணம். உணவுத்துÊகள்கள் ஈறுகளில் போய் ஒட்டிக் கொள்ளும்போது ரசாயன மாற்றம் நடக்கும். இதனால் ஈறுகளில் ரத்தம் வரும். உடலில் ஹார்மோன் மாற்றம் காரணமாக பெண்கள் வயதுக்கு வரும் போதும், கர்ப்பக் காலத்தின்போதும் ஈறுகளில் ரத்தம் வருவதுண்டு.

ஈறுகளில் வலி வரும்போது, ‘க்ளோவ் ஆயில்’ வைக்கலாமா?

தவறில்லை. ஆனால், இது தற்காலிக நிவாரணம்தான். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றக் கூடாது. இதனால் ஈறு வெந்துவிடும் ஆபத்து உண்டு.

பற்களைப் பிடுங்குவதால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுமா?

இது தவறு. பற்களுக்கும் மூளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஏதேனும் நோய்க்கான அறிகுறிதான் பல்வலியா?

சைனஸ் இன்ஃபெக்ஜனாக இருந்தால் மேல் கடவாய்ப் பற்களில் வலி எடுக்கும். மிகவும் அரிதாக, மாரடைப்பின் போது, கீழ்த்தாடையின் இடப்பக்கம் வலி வரும்.

டயாபடீஸ், இதய நோய் இருப்பவர்களுக்கு பற்களில் பாதிப்பு வருமா?

சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். அதனால் கவனம் தேவை. பொதுவாக இதய நோயாளிகளுக்கு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை சிபாரிசு செய்யப்படுவதுண்டு. அதனால் பற்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, பல் டாக்டரிடம் எடுத்துக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி தெளிவுபடுத்த வேண்டும். இது முக்கியம்.

பற்களில் ‘க்ளிப்’ மாட்டுவது நல்லதா?

நல்லது. பார்க்கவும் அழகாக இருக்கும்.

_ எஸ். அன்வர்
Quelle - Kumutham

2 Kommentare:

Ram.K hat gesagt…

ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் டாக்டரிடம் போக வேண்டுமாம். பல் பிரச்சினை வந்தால் தான் டாக்டரிடம் போகும் பழக்கம் உள்ளவர்களுக்கு நல்ல உபயோகமான தகவல்கள்.

Chandravathanaa hat gesagt…

Chameleon - பச்சோந்தி
உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி